என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yercaud express train"

    • சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
    • ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.

    சேலம்:

    ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .

    அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.

    இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.

    இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.

    பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
    • ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டது.

    ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.28 மணியளவில் வந்தது. பயணிகள் இறங்கிய பின்பு மீண்டும் சிறிது நேரத்தில் ஈரோடு நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருப்பத்தூர்-மவுகாரம்பட்டி ரெயில் நிலையத்திற்கு இடையே சு.பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் எருமை மாடுகள் அடிபட்டு இறந்தன. எருமை மாடுகள் உடல் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட தால் உடனடியாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.

    இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

    ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. பெட்டியில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பணம் இருந்த சூட்கேசை பெரியசாமிக்கு தெரியாமல் திருடிச்சென்றனர். அதில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து விட்டு காலியான சூட்கேசை ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் தண்டவாளத்தில் வீசி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரெயில் மொரப்பூரில் நின்ற போது பெரியசாமி பெட்டியை பார்த்துள்ளார். அதன் பிறகு தூங்கியுள்ளார். ஜோலார்பேட்டையை ரெயில் கடந்த பிறகு அவர் கண் விழித்து பார்த்துள்ளார்.

    அப்போது பெட்டியுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆம்பூரில் ரெயில் நின்றுள்ளது. ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பெட்டியை வீசியுள்ளனர்.

    அதன் பிறகு ரெயில் குடியாத்தத்தில் நின்றது. இதனால் கொள்ளையர்கள் குடியாத்தத்தில் இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியாத்தம் ரெயில் நிலையத்தில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்திற்கு பின்னர் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. ஒருவேளை கொள்ளையர்கள் இந்த ரெயில் நிலையங்களில் இறங்கி தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை கொள்ளை நடந்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு மாவட்டம் தோனாநள்ளியை அடுத்த நந்தகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி. பில்டிங் காண்டிராக்டர். இவர் தனது தொழில் வி‌ஷயமாக அடிக்கடி இந்த ரெயிலில் சென்னை வருவது வழக்கம்.

    நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ஏ.சி. 2-ம் வகுப்பு (எச்.ஏ.1) பெட்டியில் ரூ.10 லட்சம் பணப் பெட்டியுடன் பயணம் செய்துள்ளார்.

    பணப்பெட்டியை அருகில் வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் காட்பாடி நிலையத்திற்கு ரெயில் வந்த போது திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது பணப் பெட்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அருகில் உள்ள பகுதி முழுவதும் தேடினார். கிடைக்க வில்லை.

    பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த காண்டிராக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வண்ணம் இருந்தார்.

    அதே ரெயிலில் மற்றொரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. 2-ம் படுக்கை வசதி பெட்டி எண் எஸ்-12ல் பயணம் செய்த சண்முகசுந்தரம் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை போய் உள்ளது.

    சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அவர் மனைவியுடன் பயணம் செய்தபோது அவரிடம் இருந்த பையை அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    ஒரே ரெயிலில் அடுத்தடுத்து பயணிகளிடம் கொள்ளை நடந்திருப்பது ரெயில் பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    பயணிகளை தாக்காமல் அவர்கள் தூங்கும் போது சக பயணியாக பெட்டிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசில் காண்டிராக்டர் பெரியசாமியும், சண்முக சுந்தரமும் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாமஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளைப் போன ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியிலும் போலீசார் சோதனை நடத்தினர். எஸ்-12 பெட்டியின் கழிவறையில் சண்முகசுந்தரத்தின் கைப்பை வீசப்பட்டு இருந்ததை கைப்பற்றினர்.

    இதே போல் ரூ.10 லட்சம் வைத்திருந்த பணப்பெட்டி ஜோலார்பேட்டை அருகே பச்சைகுப்பம் என்ற இடத்தில் காலியாக கிடந்துள்ளது. அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    ஜோலார்பேட்டை எல்லைக்குள் தான் கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை எடுத்து விட்டு பெட்டியை வீசி விட்டு அங்கு குதித்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ×