என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு அனுமதி- விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியது
- புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது.
- அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதிக்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை நேற்று வழங்கியது.
ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு இடஅனுமதி ஏற்கனவே கிடைத்த நிலையில் தற்போது திட்ட ஒப்புதலும் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது.
இதையடுத்து அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






