என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜான் ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    • கைதான ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

    கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).

    இவர் காந்திபுரம் பகுதியில் செயல்பட்ட கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் போதகராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பாடல்களில் பாப் இசையை புகுத்தி பாடல்கள் பாடி வந்ததால் ஜான்ஜெபராஜ் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

    இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் ஜான்ஜெபராஜ் மீது கோவையில் 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.

    இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

    மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.

    இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    இன்று அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி வரை ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜான்ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    • யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை (14-ந்தேதி) அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
    • லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.

    இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.

    லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

    தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் 'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    இதனையொட்டி காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு உன்னதங்களிலே ஒசன்னா என பாடல்கள் பாடியவாறு பவனியாக சென்றனர்.

    பவனியானது பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேராலயத்தின் கீழ்க்கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும், பேராலயத்தில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
    • எனது இதயமார்ந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.

    'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

    மலர இருக்கும் 'விசு வாவசு' ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும், எண்ணங்கள் ஈடேறட்டும், முயற்சிகள் முளைக்கட்டும், வெற்றிகள் பதியட்டும், புன்னகை பூக்கட்டும், மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார்.
    • தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.

    விழுப்புரம்:

    தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாசை சந்தித்து பேசினார்.

    இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாசை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.

    இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார். 

    • தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
    • 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

    மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.

    தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.

    அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

    • நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
    • பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைராக நானே செயல்படுவேன். செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார்.

    இந்த நிலையில் அவரை சமாதானம் படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், டாக்டர் ராமதாசின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ.சிவக் குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
    • காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் யார்? என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் பதவியை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவராக நான் நீடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் தொடர்பாக அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    • இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
    • கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

    அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்.
    • அவரது துணிச்சலான மற்றும் நியாயமான பரிந்துரைகள் பல இன்னும் தூசி படிந்துள்ளன.

    சென்னை:

    சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:-

    நாடு அங்கீகரிப்பதற்கு முன்பே பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையில் திராவிட இயக்கம் உறுதியாக நின்றது. பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம். அவர் நடத்திய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அவரது துணிச்சலான மற்றும் நியாயமான பரிந்துரைகள் பல இன்னும் தூசி படிந்துள்ளன, மேலும் சமூக நீதிக்கான முயற்சிகள் புதிய வடிவங்களில் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.

    பி.பி.மண்டலை மதிப்பது என்பது அவரது முழுமையான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதாகும், அதை நீர்த்துப்போகச் செய்வதல்ல. அந்தப் போராட்டத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.



    • சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது.
    • வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க முடிந்தது. குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிக்கொள்ள அனுமதி கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றார்.

    இதனிடையே, சைத்தான் கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் ஏன் சைத்தாவுடன் கூட்டணி வைத்தீர்கள் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன், அரசியல்வாதிகள் சூழலுக்கேற்ப மாற்றிமாற்றிதான் பேசுவோம். பழசை எல்லாம் துடைத்துவிடவேண்டும் என்றார்.

    ×