என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
- ஜான் ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- கைதான ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).
இவர் காந்திபுரம் பகுதியில் செயல்பட்ட கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் போதகராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பாடல்களில் பாப் இசையை புகுத்தி பாடல்கள் பாடி வந்ததால் ஜான்ஜெபராஜ் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ஜான்ஜெபராஜ் மீது கோவையில் 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.
இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.
இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இன்று அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி வரை ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜான்ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.






