என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல.
    • பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

    உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
    • தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள்.
    • பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவர்களோடு தங்கி இருக்கும் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சிகிச்சைக்காக வருபவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் வரையில் சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

    இது தவிர ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள். இதுபோன்று டெல்லிக்கும் அதிக அளவில் பாகிஸ்தானியர்கள் வருகை புரிவது தெரிய வந்துள்ளது. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானில் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற திருமண பந்தங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்று பாகிஸ்தானில் திருமண உறவு உள்ளிட்டவைகள் வைத்திருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய விவரங்களையும் அந்த மாநில அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் 24 மணி நேரத்துக்குள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

    இப்படி தான் 500 பேர் வரையில் தமிழகத்துக்கு வந்து செல்வதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படி தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் தற்போது எத்தனை பேர் உள்ளனர்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாகவும் அதுபோன்ற நபர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை தவிர்த்து அனைவரையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, சிகிச்சையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வருபவர்களும் தாங்கள் வேலை செய்யும் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தருவார்கள். பாகிஸ்தானியர்கள் பலர் துபாயில் தங்கி இருந்து அங்குள்ள அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்வார்கள்.

    அவர்கள் நிறுவனத்தின் சார்பில் சென்னைக்கு வேலை விஷயமாக அனுப்பி வைக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பது பற்றிய பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
    • எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது.

    இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சீமானை சேர்ப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சீமான் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பு பற்றி சீமானிடம் கேட்டபோது, எங்கள் இருவருக்குமிடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே தற்போதும் சந்தித்துள்ளேன். அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

    • தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன.
    • அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26-ம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 5 லட்சம் மாணவர் சேர்க்கை இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் சேரத்தகுதியான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில், இனி எவரும் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை என்றும், அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் தான் மிகவும் குறைவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 31, 336 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் ப்ள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் நடைபெற்று வருகின்றன. இத்தனைப் பள்ளிகளில் வெறும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றால், ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தான் பொருள். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 5 மாணவர்கள் கூட சேரத் தயாராக இல்லை என்றால், அரசு பள்ளிகளுக்கு மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டும் தான் பயில்கின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்களே விளக்குகின்றன.

    அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் அங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான். தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பல பள்ளிகளில் மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.

    அதேபோல், ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர், மாணவியரை சேர்க்கப்படுவதை வகை செய்ய வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர்.

    மதுரை:

    தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார்.

    இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.

    மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.

    சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.

    மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.

    மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.

    சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

    • எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு விருந்து வைத்தார்.
    • பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் பேசினார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது.

    இதையொட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு விருந்து வைத்தார்.

    இந்த விருந்தில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.பி.க்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.

    இந்த நிலையில் நேற்று விருந்தை புறக்கணித்த செங்கோட்டையனுக்கு சட்டசபையில் பேச கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்தார்.

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் பேசினார்.

    பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்தார்.

    • தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

    சென்னை:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மொத்தம் 140 பேர் காஷ்மீர் சென்றிருந்தது தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்த வாரம் பல்வேறு தேதிகளில் திரும்பி வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

    தற்போது அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் ஒவ்வொருவரும் உடனே தமிழ்நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

    அதன் பேரில் அங்கு சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள பயணிகளை ஒருங்கிணைக்க புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அல்தாப் ரசூ லையும் காஷ்மீருக்கு அரசு அனுப்பி வைத்தது. இவரது சொந்த ஊர் காஷ்மீர் என்பதால் இவர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வேகமாக ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்க வைத்து அதன் விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து வந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வசதி, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து காஷ்மீரில் இருந்து டெல்லி வழியாக ஊருக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் தமிழக சுற்றுலா பயணிகள் 35 பேர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தனர். அவர்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று அரசு இல்லத்தில் உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் 35 பேரும் நேற்றிரவு 9 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

    மேலும் 19 பேர் காஷ்மீரில் இருந்து தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு ஐதராபாத் வழியாக விமானம் மூலம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். இதில் 14 பேர் மதுரையை சேர்ந்த வர்கள். 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 19 பேரையும் தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே போல் இன்றும் காலையில் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து 50 பேர் விமானம் மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்த டைந்தனர்.

    காஷ்மீர் சுற்றுலா சென்ற 140 பயணிகளில் இதுவரை 100 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், இன்னும் 40 பேர் அடுத்தடுத்த விமானங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக பயணிகள் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த ரிட்டன் டிக்கெட்டை முன் கூட்டியே உடனே பயன் படுத்தி பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவியது. அதே போல் தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள அரசு அதிகாரிகள் உதவி செய்து கொடுத்திருந்தனர்.

    நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை வந்து சேரும். அதில் உள்ள சுற்றுலா பயணிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க சென்டிரலில் வாகன வசதி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து தமிழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் குண்டு காயம் அடைந்த மதுரையை சேர்ந்த பாலசந்துரு அனந்தநாக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவி உடன் இருக்கிறார்.

    இதே போல் அங்கு சிகிச்சையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 31), சந்துரு (வயது 83) ஆகியோரும், இவருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனராவ் என்பவரின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை வந்து, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளிவருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    சில நேரங்களில் மனித உயிருக்கும் ஆபத்தை விளை விக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இரவு நேர காவலில் இருந்த விவசாயியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றிய விபரம் வருமாறு:- தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு சாமி (வயது 55). விவசாயி.

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இக்கலூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரத்தில் தங்களது தோட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு பிரபு சாமி தனது கரும்பு தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்துள்ளார். அப்போது அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் பிரபுசாமி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது.

    திடீரென யானை தோட்டத்திற்குள் வந்ததால் அதிர்ச்சியடைந்த பிரபு சாமி அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் ஒற்றை யானை அவரை தாக்கியது. இதில் இரு கால்களில் பலத்த காயம் அடைந்த பிரபு சாமி வலியால் அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    பின்னர் யானை தாக்கி படுகாயம் அடைந்த பிரபு சாமியை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபு சாமி கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.
    • கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

    கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என வலியுறுத்தினர்.

    * மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர்.

    * தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.

    * பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

    * கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

    * கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.
    • கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.

    கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:

    * தமிழகத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை.

    * காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.

    * நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேபோல் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை.

    * அரசியல் ரீதியாக தி.மு.க. - பா.ம.க. இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் கலைஞர் பேரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கோருகிறோம்.

    * கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.

    * கலைஞர் பெயரில் பல்கலை. அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
    • பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதேபோல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

    அந்த வகையில், துலுக்கன்குறிச்சி பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை தனித் தாசில்தார் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    முன்னதாக துலுக்கன்குறிச்சியில் உள்ள மஞ்சுநாத் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலை கடந்த 2020-ல் பட்டாசு வெடி விபத்து காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காமல் அந்த தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

    அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை மற்றும் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), மதன்குமார் (32), செந்தமிழ் வெற்றி பாண்டியன் (40), இளஞ்செழியன் (40), மணிகண்டன் (38), விஜயகுமார் (40), மஞ்சுநாத் குமார் (40) ஆகியோர் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து துலுக்கன் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டாசு தயாரித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள், சோல்சா வெடிகள், மேலும் முழுமையடையாத பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    ×