என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
- இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது.
- டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் கொலை.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவரது மனைவி தனலட்சுமி (வயது 30),
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி தனம் துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவரது தம்பி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும், பட்டுராஜனை கொலை செய்த பகுதியான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியான அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ் (25), ஹரிகர சுதன் (24) ஆகிய 2 பேர் குற்றாலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது கொலையில் தொடர்புடைய செண்பகம் (40), மணி என்ற புறா மணி (25) ஆகிய 2 பேர் திருச்செந்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று செண்பகம், மணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட பட்டுராஜாவின் மனைவியின் தம்பி ஆவார். இவர் காசிமேஜர்புரம் பகுதியில் ஆட்டு மந்தை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஆட்டு மந்தையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது மர்ம நபர் ஓடுவது போல தென்பட்டதாகவும், இதனால் தன்னை கொலை செய்ய தான் யாரோ வந்திருக்கிறார்கள் எனவும் ரமேஷ் கருதி உள்ளார்.
இந்நிலையில், குத்தாலிங்கம் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடு வெட்டுவது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ரமேஷ், குத்தாலிங்கத்தால் தனது உயிருக்கு ஆபத்து வரும் எனக் கருதி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சித்தப்பாவான செண்பகம் மற்றும் சித்தப்பா மகனான ஹரிகர சுதன் ஆகியோரிடம் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து குத்தாலிங்கத்தை கொலை செய்ய அவரது நண்பரான புறா மணியையும் அழைத்துக்கொண்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
- ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.
இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.
- இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
- பிரச்சனைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலயம் அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.
"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?
அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
- தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.
சென்னை:
தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் 'தடம் எண் 55 பி' என்ற பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூர், கிரவுன் பேலஸ், அண்ணா நகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரெயில் நிலையம், ஆதனூர் பிரதான சாலை, வண்டலூர் பங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை வந்தடையும். இது போல கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.
புறப்படும் நேரம்: இப்பஸ் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 7.30, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும் கிளாம்பாக்கத்தில் இருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.
- சென்னை சாஸ்திரி பவன் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதை மீறி நடத்தப்பட்டதால் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து சென்னை சாஸ்திரி பவன் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதை மீறி நடத்தப்பட்டதால் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 214 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது.
- அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கோடைகாலத்திலும் வினாடிக்கு 500 அடிக்கு மேல் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1385 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும்.
- தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும்.
சென்னை:
சென்னையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. சென்னை மேடவாக்கத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ. மழை பெய்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:-
சென்னையில் நேற்று பெய்தது சாதாரண வெப்பச்சலன இடி மழைதான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உருவான இடிமழை மேகங்கள் அப்படியே காற்றின் போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த மழை மேகங்கள் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தூரம் பயணித்து சென்னைக்கு நேற்று முற்பகல் 11 மணியளவில் நகர்ந்து வந்த போது கடற்காற்றும் உள்ளே புகுந்ததால் வலுவடைந்தது. இதனால் சென்னையில் நேற்று இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கோடை மழை என்பதால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இன்று முதல் மழை குறைய தொடங்கும். வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் வெயில் உச்சம் தொடும்.
வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும். மே 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்புதான் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியது. தமிழகத்தில் இன்று முதல் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க கூடும்.
வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் , ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்பட 22 மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை நிலவக்கூடும்.
தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம்.
வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளி பகுதிகளில் விவசாயப் பணிகள், கட்டுமான பணிகள் போன்ற பொதுவெளி பணிகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்மிக பாதயாத்திரை செல்பவர்கள், மலைப்பகுதி ஏறுபவர்கள் முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபடியாக நீர் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.
- சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து நாளை முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 21-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேவேளையில் மதிய நேரங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரு தேர்விலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்ற பலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
- தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவது சரியல்ல.
தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 6695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 6695 பேர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும்.
ஆனால், தமிழக அரசின் தேர்வுத்துறை தயாரித்த பட்டியலில் ஒரு தேர்வில் 40% மதிப்பெண் பெறாத மாணவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னொரு தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருப்பதால், இரண்டிலும் சேர்த்து சராசரியாக 40%க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறி அவர்கள் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரு தேர்விலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்ற பலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தவறு மற்றும் சமூக அநீதி ஆகும்.
தேசிய கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவது மாணவர்களுக்கு மதிப்பு சேர்க்கும் விஷயமாகும். அதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கும் மாணவர்கள், பட்டியல் தயாரித்தவர்கள் செய்த குளறுபடியால், தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அது அவர்களின் கல்வியையும் பாதிக்கும். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
எனவே, இந்த சிக்கலில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு, தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இரு தேர்வுகளிலும் தலா 40% மதிப்பெண் என்ற அடிப்படைத் தகுதியை பெற்ற மாணவர்களை மட்டும் வைத்து புதிய பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும்.
- இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்தவர்கள்தான்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த நீயா? நானா? போட்டியால் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள். கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது.
இனி நமக்கு அங்கு சரிப்பட்டு வராது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன்.
அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு என்று தனிக் குழுவாக செயல்படத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
சசிகலாவோ எப்படியாவது அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என்ற முடிவோடு கட்சியை ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று புறப்பட்டார். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை கை கொடுக்க வில்லை.
இந்த நிலையில் தான் வரப்போகும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணி வெற்றிக்கு தலைவர்கள் ஒன்றிணையா விட்டாலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை அமித்ஷா அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக போனில் உரையாடி விளக்கினார்.
கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலில் வெற்றி பெற, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சமரச யோசனைகள் தலைவர்களிடையேயும் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறது.
அ.தி.மு.க.வின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அ.தி.மு.க. கொடி போல அ.ம.மு.க. கொடியை வடிவமைத்ததற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அ.தி.மு.க. பொதுச் செலாளர் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீலும் ஒப்புதல் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். தினகரன் மீதான வழக்கை வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே போல் டி.டி.வி. தினகரனின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று அளித்த பேட் டியில் தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலுப்பட வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது. கூட்டணியில் எல்லோரையும் அனுசரித்து செல்வோம்.
2021 வரை பா.ஜனதா கூட்டணியில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி, கட்சியை அழிந்து விடாமல் பாதுகாக்க இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்ட ணியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளின் நிலைப்பாடும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று கூறி உள்ளார்.
ஒரே கூட்டணியில் அணி வகுத்து இருக்கும் சூழ்நிலையில் இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அடுத்து என்ன என்று தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.
- கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.
சென்னை:
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.
இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார்.






