என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.
- பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையே ஏற்படுத்தி உள்ளோம்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு நான் காரணம் அல்ல, நாசர் தான் காரணம்.
* பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது.
* நவீன தமிழகத்தின் சிற்பி என போற்றப்படுபவர் தான் கலைஞர், அதற்கு அடையாளம் தான் இந்த மாவட்டம்.
* திருவள்ளூரை சுற்றி தற்போது உள்ள தொழில் வளர்ச்சிக்கு கலைஞர் தான் காரணம். கார் உற்பத்தியில் தொடங்கி, கண்ணாடி உற்பத்தி ஆலை வரை கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
* எண்ணூரில் ரூ.18,000 கோடியில் அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
* பெரியபாளையம், திருவேற்காடு, சிறுவாபுரி கோவில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
* கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
* காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளத்தை மேம்படுத்த ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* திருமழிசை- ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்.
* வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.
* 63 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது தான் மகிழ்ச்சியை தருகிறது.
* அனைத்து திட்டங்களும் திருவள்ளூருக்கே செல்வதா மலைப்பாக உள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முடங்கி கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
* பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையே ஏற்படுத்தி உள்ளோம்.
* குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தால் தாய்மார்களின் வேலை குறைந்துள்ளது.
* தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.
* வளமான தமிழ்நாடாக மட்டும் அல்ல, நலமான தமிழ்நாட்டையும் உருவாக்கி உள்ளோம்.
* மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக தமிழகம் தான் உள்ளது.
* உள்ளாட்சி அமைப்புகளின் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம் என்றார்.
- 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
- மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு
சென்னை:
கடந்த 1997-2000-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அதேபோல, இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு துணையாக செயல்பட்ட ஹைதர் அலி என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கும் 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டது
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை ஐகோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14-ந்தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒரு இடையீட்டு மனுவை ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவானது சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
- பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கட்சி தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான் என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது என்றார்.
- 26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
- புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சியில் புதிதாக சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் கட்சி ரீதியாக 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டங்களாகவும் சில மாவட்டங்கள் 1 தொகுதிக்கு ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 6 மாவட்ட செயலாளர்களுக்கான பட்டியலை அறிவிப்பு விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.
இதற்கிடையே கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 35 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் 70 ஆயிரம் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணிகள் முடி வடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு வருகிற 26, 27-ந் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு 2 மண்டலங்களாக நடக்கிறது. கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களுக்கான மாநாடு நடைபெறுகிறது.
26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டில் தேர்தல் ணிகள், மக்களிடையே தமிழக வெற்றிக் கழக திட்டங்களை கொண்டு செல்வது மற்றும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் பற்றி விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தை சமீபத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் புதுப்பேட்டை மீனவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர், காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி, தமிழக எல்லை பகுதிக்கு வந்து புதுப்பேட்டை மீனவர்களை ஆயுதம் கொண்டு தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
- தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் மாருதி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார்.
- அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார்.
- அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார்.
கோபி:
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் எம்.எல். ஏ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 9:15 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் மேடையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பெரிய அளவில் இருந்தன. இதேபோல் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படமும் பெரியளவில் இருந்தன.
மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்ற வாசகமும் இருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டும், அதை விடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாடு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க போராட்டம் முன்னெடுத்து உள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. செல்லும் பாதை சரியானதாக இல்லை. கொடிவேரி சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும், கோபி முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.
வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.
100 நாள் தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் ஊதியம் பெறுவதற்கு சட்டமன்றத்தில் குரல் எடுப்போம். அது போல ஊதியம் வருவதற்கு எதிர்கட்சி தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேசிய வார்த்தைக்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஒரு அமைச்சர் தான் பொறுப்பேற்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறார்.
அப்படி உறுதிமொழி மீறி ஒரு அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. இதனை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடிய நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர் பேச்சு மற்றவர்கள் புண்படும் அளவிற்கு குறிப்பாக பெண்கள் மனம் புண்படும் அளவிற்கு பெண்களை இழிவு படுத்தும் வார்த்தை என்பது அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. ஆகையால் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு என்ன முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முடிவு செய்வார். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, இது போன்ற நிலை ஏற்படும் போது அப்போது ஆட்சி காலத்தில் அ.தி.முக. இருந்த சூழலில் மூன்று மாதத்திற்கான தொகை அரசே வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
- 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.
இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3-வது நாளாக தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
- 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவதலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் காலை 5.30மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 6.15மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார்.
அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 25-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
- நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இதனிடையே கடந்த 15-ந்தேதி சற்று குறைந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,940-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனையாகிறது. தமிழ் புத்தாண்டில் இருந்து இந்நாள் வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520
15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
16-04-2025- ஒரு கிராம் ரூ.110
15-04-2025- ஒரு கிராம் ரூ.110
14-04-2025- ஒரு கிராம் ரூ.108
13-04-2025- ஒரு கிராம் ரூ.110
- அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.






