என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கட்டாய திருமணம் செய்தது போன்றது- கார்த்தி சிதம்பரம்
- பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கட்சி தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான் என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது என்றார்.






