என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை?
    • கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் கடந்த 5-ந் தேதி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவினை பார்க்க சென்ற பட்டியல் சமுதாய மக்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நேரடியாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா, மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

    பின்னர் அரசு வக்கீல்கள் வாதிடுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேர்த்து இடைக்கால நிவாரணமாக ரூ.8¾ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும். அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.

    அதற்கு நீதிபதிகள், கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வருவாய் துறையினர் அனைவரும் ஒயிர் காலர் வேலைதான் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். பின்னர் சம்பவம் தொடர்பான கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில், வடகாடு திருவிழாவில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். 

    • 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    • தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!

    பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!

    இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்.
    • தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு 93.80 சதவீத மாணவர்களும், 11-ம் வகுப்பில் 92.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். 



    • பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
    • செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.

    இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கூட்டத்திற்கு முன்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

    * அனைத்து தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்.

    * பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.

    * செயல்தலைவர் அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்.

    * செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    * 50 தொகுதிகளில் இலகுவாக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.

    * 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட ஆலோசனை வழங்க உள்ளேன்.

    * சிங்கத்தின் கால்கல் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை.

    * களைப்படைந்ததால் சிலர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.

    * சித்திரை மாநாட்டு பணியால் சிலர் களைப்படைந்திருக்கலாம், அதனால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.

    * கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாத வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

    இதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி தொடர்பாக பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி அ.தி.மு.க. கூட்டணி கதவுகள் திறந்திருக்கும் நிலையில் சீமான் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கே நாம் தமிழர் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கோவையில் நடைபெறும் கூட்டத்தை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை மறுநாள் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசுகிறார்.

    அப்போது வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடுமாறு சீமானுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் சீமான் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு யாருடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதி செய்ய இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் சீமான் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.

    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் கீர்த்திவாசனி (15). பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

    தேர்வு இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் எனவும், தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி கீர்த்தி வாசனி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது தாய் கவிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தமிழ் - 70, ஆங்கிலம் - 83, கணிதம் - 81, அறிவியல் - 70, சமூக அறிவியல் - 44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (17.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, சென்னீர்குப்பம் பகுதிகளில் கண்ணபாளையம், பாரிவாக்கம், ஆயில்ச்சேரி, பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம்.

    ராயாபுரம்: ராயலா நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், பாரதி சாலை, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பாரதி நகர், திருமலை நகர், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், முகலிவாக்கம் பகுதி, சுபஸ்ரீ நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

    இவரது மனைவி சரஸ்வதி பாளை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து, முத்துக்குமார் உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.

    இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதும், ஏர்வாடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.

    அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சார்பில் 6 தனிப்படைகள், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 1 தனிப்படை என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த கும்பல் சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகர போலீஸ் தனிப்படை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விரைந்தது. அங்கு நேற்று காலை முதல் முகாமிட்டு தீவிரமாக தேடிய நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த பொன்ராஜ், இசக்கிமுத்து, முத்துக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை இன்று காலை நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் யார்? எதற்காக அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

    மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.

    கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 



    • கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும்.
    • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

    இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.

    கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.

    மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்தார்.

    அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் தற்போது வரை கூட்டத்திற்கு வரவில்லை.

    இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசும் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே நாளை மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 7 நாட்களுக்கு பா.ம.க. அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை முதலே பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

    • ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

    மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.

    அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.

    இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×