என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி- 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி
- தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் கீர்த்திவாசனி (15). பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் எனவும், தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி கீர்த்தி வாசனி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது தாய் கவிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தமிழ் - 70, ஆங்கிலம் - 83, கணிதம் - 81, அறிவியல் - 70, சமூக அறிவியல் - 44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.






