என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
    • ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

    மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும்.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    வேலூர்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி இடையே கட்சி பூசல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

    டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    நேற்று தைலாபுரத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி அந்த கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில் வேலூர் மாநகர் பகுதி மற்றும் குடியாத்தம், அணைக்கட்டு பள்ளி கொண்டா, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    அந்த சுவரொட்டிகளில் அய்யா தான் அடையாளம்.. அய்யா தான்... அதிகாரம் அய்யா தானே எல்லாம். சிறை சென்றவனே தலைவன் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.

    டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 80 சதவீதத்திற்கும் மேல் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது கட்சியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    இஸ்லாமியர்களின் இரு பெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.

    இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக-கல்வி-பொருளாதார உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சகோதர உணர்வோடு எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
    • நெல்லையப்பர் கோவிலுக்கு 450 கிலோ எடை கொண்ட வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

    இன்று மட்டும் 24 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். நெல்லையப்பர் கோவிலுக்கு 450 கிலோ எடை கொண்ட வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.

    முருகன் மாநாடு அல்ல. சங்கிகள் நடத்தும் மாநாடு, அரசியல் மாநாடு. அதற்கும் திருக்கோவில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. நாங்கள் அரசியல் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த முருகப் பக்தர்கள் பங்கேற்றனர். 2 நாள் நிகழ்ச்சி. நாங்கள் திட்டமிட்டு எந்த கூட்டத்தையும் வரவைக்கவில்லை. திட்டமிட்டு யாரிடமும் நாங்கள் அப்போது வசூல் வேட்டை நடத்தவில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 லட்சம் மக்கள் வந்தார்கள். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அந்நிகழ்ச்சி 7 நாட்களாக நீடிக்கப்பட்டது. ஆகவே அதையும், இதையும் ஒன்றாக்காதீர்கள். இது அரசியல் தேவைகளுக்காக, அரசியல் சூழல் நிலைக்காக, மதத்தால், இனத்தால் மக்களை எப்படியெல்லாம் பிளவுப்படுத்த முடியுமோ? அந்த பிளவிற்கான அந்த ஆயுதமான இந்த மாநாட்டை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

    தமிழிசை சிறந்த அறிவாளி. அவரது ஆலோசனைகளை, போதனைகளை கேட்டுத்தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

    300 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்துவிட்டு விளம்பரப்படுத்துகிறார். நாங்கள் இந்த கல்வியாண்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை தருகிறோம் என்றார். 

    • தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
    • மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர்.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக வருகிற 8-ந்தேதி மதுரையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதற்காக அவர் நாளை (7-ந்தேதி) இரவு மதுரை வருகிறார். தனியார் ஓட்டலில் வைத்து மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே வேலம்மாள் திடலில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    கூட்டணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்தல், தென்மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுதல் உள்ளிட்டவைகளை இலக்காக கொண்டு இந்த கூட்டத்திற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரை மண்ணில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பணியை தொடங்க முடிவு செய்துள்ள பா.ஜ.க., நிச்சயம் இந்த கூட்டம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் மதுரையில் இன்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன. காரணம், மதுரை தமிழகத்தின் உணர்ச்சி களம். ஒட்டுமொத்த அரசியல் உணர்வு களமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, தேசிய அளவிலான பிரசாரத்தை அப்போதைய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரையில்தான் தொடங்கினார்.

    மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை, கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு வரவில்லை என்ற குறை இருந்தது. அதனை போக்கவே தற்போது அவர் மதுரை வருகிறார். நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை தொகுதியில் போட்டியிட்ட என்னை ஆதரித்து ரோடு-ஷோ நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அதற்கு பலனாக மதுரையில் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் முக்கியத்துவத்தை அறிந்தும் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார். இந்த கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இது முழுக்க முழுக்க நிர்வாகிகளுக்கான கூட்டம் தான். செயல்வீரர்களுடன் அமித்ஷா பேசுகிறார்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழக சட்டமன்ற தேர்தல் களம் வருகிற 8-ந்தேதி மதுரையில் அமித்ஷா வருகையுடன் தொடங்குகிறது. இது ஒரு அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரம் தான். அப்போது முதல் ஆபரேசன் கவுண்டவுன் தொடங்கிவிடுகிறது. அதாவது ஜூன் 8-ந்தேதி முதல் தி.மு.க. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி நாட்கள் எண்ணப்படுகிறது.

    அமித்ஷாவின் வருகையானது கூட்டணியை பலப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதனால் புதிய கட்சிகளை சேர்ப்பதாக அர்த்தமல்ல. இருக்கும் கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வியூகங்கள் வகுக்கப்படும். பொதுவான செயல்திட்டங்கள், தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்படும். அதன் மூலம் தி.மு.க. மீதான அதிருப்தி ஆத்திரமாக மாறும்.

    உண்மையை எடுத்துச் சொல்லும்போது மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். அதற்காக நாங்கள் பொய் சொல்லப்போவதில்லை. உண்மையை எடுத்துக்கூறுவதால் மக்கள் புரிதலோடு, விழிப்புணர்வாகவும் மாறும். சமீபத்தில் சென்னை வருகை தந்த மத்திய மந்திரி அமித்ஷா தங்களை சந்திக்கவில்லை என்று ஓ.பி.எஸ். கூறியிருந்தார். எங்களை பொறுத்தவரை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்களது மதிப்புமிக்க தலைவர்கள். இந்த முறை மதுரை வருகை தரும் அமித்ஷா அவர்களை சந்திக்கலாம்.

    நாங்கள் இந்தியா கூட்டணி போல் கிடையாது. அனைவரையும் அழைத்து ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு உயர்த்தி காட்டி பலத்தை எடுத்துரைப்பது. விட்டால் அவர்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் அதுபோன்று நடந்து கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி அப்படி அல்ல.

    பழனியில் தமிழக அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு என்பது வெளிப்படையான முருகன் மாநாடு. உள்ளுக்குள் சனாதன ஒழிப்பு மாநாடு. வெளிப்படையாக முருகனை பற்றி பேசிக்கொண்டு உள்ளுக்குள் இந்து விரோத காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார்கள். இந்து தர்மம், இந்து மரபு, இந்து பண்பாடு, குறைந்தபட்சம் இந்து என்ற வார்த்தையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. நாங்கள் உள்ளும், வெளியி ம் முருக பக்தர்கள். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி, நாங்கள் எப்போதும் பசுதான்.

    பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் நாங்கள் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 5 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தோம். இது தவிர தமிழகத்தில் உள்ள மற்ற 29 தொகுதிகளில் கோவை, ஊட்டி, மத்திய சென்னை, தென்சென்னை, தர்மபுரி ஆகிய 5-ல் இரண்டாம் இடம் பிடித்தோம். ஒட்டுமொத்தமாக 29-ல் 5 இடங்களிலும், தென்மாவட்டங்களில் உள்ள 10-ல் 5 இடங்களிலும் இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பெற்றுள்ளது.

    சட்டமன்றத்திலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மத்தி, தெற்கு, கிழக்கு ஆகிய தொகுதிகளிலும் 2-ம் இடம் கிடைத்துள்ளது. தி.மு.க. வேண்டுமானால் தெற்கு தேய்கிறது என்று கூறலாம். பா.ஜ.க.வை பொறுத்தவரை தெற்கு வளர்கிறது. இதுபோன்ற காரணங்களால் தமிழ் நாட்டில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், குறிவைத்தும் பா.ஜ.க. செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னோட்டம் தான் அமித்ஷாவின் மதுரை வருகையும்.

    இந்த கூட்டம் தேர்தல் வந்துவிட்டது, தயாராகுங்கள் தொண்டர்களே என்பதை அறிவிக்கும் ஒரு பிரசாரமாகவும், பணியாகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்;
    • மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். அதனை எக்ஸ் தள பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்,

    தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.

    *முயற்சிகள் தொடரும்*

    ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப் பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.

    நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.
    • உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

    அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது மு.க.ஸ்டாலினின் -ன் இந்த ட்வீட்.

    தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான்.

    என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்!

    கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!

    இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

    உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப்படுகிறார்கள்!

    ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல் , களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தற்போது சராசரியாக 80 என்ற அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • எந்த ஒரு மனுவையும் தங்களது இஷ்டப்படி முன்னதாக ஆய்வு செய்ய முடியாது.

    சென்னை:

    ஒரு காலத்தில் நமது சொத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துகளுக்கு பத்திரப்பதிவு செய்தவுடன், ஒரு நிமிட பட்டா என்ற அடிப்படையில் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும்.

    எனவே சொத்து வாங்குபவர்கள், விற்பவரின் பெயரில் பட்டா இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என்று பத்திரப்பதிவு துறை கூறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 913 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளுக்கு இ-சேவை மையம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்கலாம். இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உட்பிரிவு தேவையில்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்காரணமாக பட்டா வழங்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அதாவது கடந்த காலங்களில் சர்வேயர்கள் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் தற்போது சராசரியாக 80 என்ற அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு மிக முக்கியமாக கடந்த காலங்களில், செல்வாக்கு உள்ளவர்களும், கவனிக்கும் திறன் உள்ளவர்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதாவது ஒரு சர்வேயர், பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் வரிசையாகதான் மனுக்களை ஆய்வு செய்யவேண்டும். எந்த ஒரு மனுவையும் தங்களது இஷ்டப்படி முன்னதாக ஆய்வு செய்ய முடியாது.

    இதுகுறித்து தமிழக அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறும்போது, 'தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுகிறது. சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும். அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    • நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
    • ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், நேற்றுமுன்தினம் ரூ.80-ம், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.9,130-க்கும் ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

    03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640

    02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-06-2025- ஒரு கிராம் ரூ.114

    04-06-2025- ஒரு கிராம் ரூ.114

    03-06-2025- ஒரு கிராம் ரூ.113

    02-06-2025- ஒரு கிராம் ரூ.111

    01-06-2025- ஒரு கிராம் ரூ.111

    • இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்.
    • நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து வருமாறு:-

    தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும்; ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்றுகூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே 'பக்ரீத்' திருநாளாகும்.

    இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

    இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழி கோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனை வருக்கும், பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஆகியோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
    • நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.

    நீதித்துறையின் மாண்பையும். சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.

    நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
    • என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைய உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், tneacare@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    ×