என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள்.
- சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை.
சென்னை:
சென்னையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள். இது தொடர்பாக வானிலை மையத்திடம் கேட்டபோது கூறியதாவது:-
வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை. ஆனாலும் மக்கள் உஷ்ணத்தை அதிகமாக உணர்வதற்கு காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளதுதான் காரணம் ஆகும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியது சமாதானம் என கூறலாம்.
ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பிரசாத் மீது புகார்.
- நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரசாத்தை அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் T. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர்சிங் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது சஸ்பெண்டு உத்தரவை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கொடுங்குற்றம் புரிதல், கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல், ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 14 போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நெல்லை 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மற்றும் போலீசார் இன்று ஆஜராகினார்.
இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் மாடசாமி கூறுகையில், இந்த விவகாரம் முழுவதும் மனித உரிமை மீறல். இதனை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நீதிபதி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். சிறையில் கைதிகளுக்கு மிக பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை. இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
- குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.
- தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இந்தத் தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் (எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.15,401 அல்லது அதற்கும் கூடுதலான தொகையை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அதில் ரூ.7500 முதல் ரூ.9800 வரை மட்டுமே ஊதியமாக வழங்கிவிட்டு மீதத்தொகையை சுருட்டி விடுகின்றனர் என்பது தான் குற்றச்சாட்டு ஆகும்.
இந்த வகையில் மாதத்திற்கு ரூ.7.5 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.90 கோடி சுருட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இந்தத் தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் கூட இந்த ஊழலுக்கு முடிவுகட்டப்படவில்லை. முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சரே சுட்டிக்காட்டியும் கூட இந்த ஊழல் தடுக்கப்படவில்லை; ஊழலுக்கு காரணமானவர்களும் தண்டிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு ஊழல் கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது.
1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மலேரியா ஒழிப்புக்கான தினக்கூலி பணியாளர்களை கூடுதலாக நியமித்ததாகக் கூறி, அவர்களின் ஊதியத்தை அன்றைய சென்னை மாநகராட்சி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சுருட்டிக் கொண்டனர். அப்போது ஊதியம் முழுமையாக சுருட்டப்பட்ட நிலையில், இப்போது ஊதியத்தில் பாதி சுருட்டப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்குகள் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் மோசடி அம்பலமாகி விடும் என்பதற்காக ஊதியம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆகியவற்றின் அதிகாரிகள் பலமுறை கோரியும் அவற்றை குடிநீர்வாரிய செயற்பொறியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் வழங்க மறுக்கின்றனர். இதன் மூலம் ஊழலுக்கான ஆதாரங்களை அழிக்க அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முயல்கின்றனர். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஊழலுக்கு துணை போவது ஆகும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை சுருட்டுவதைப் போன்ற கொடுங்குற்றமும், பாவமும் உலகில் இல்லை. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
- நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்க ப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிகொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை வார சந்தையான இன்று அதிகாலை 3மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
- 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும்.
சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று வழங்கியது. அதில், நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்தது.
22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
- பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.
சென்னை:
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால்
சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
- ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.
- தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.
மதுரை:
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.
* அமித்ஷா- அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.
* ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.
* குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம்விரும்பி.
* தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.
* மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.
* திமுகவிற்கு ஷா என்றாலே பயம் என்றார்.
- தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இருந்து 4 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. வேட்பாளராக பி.வில்சன் எம்.பி., எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 4 பேரும் இன்று காலையில் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேலம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
- டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து பா.ம.க. மாநில பொருளாளர், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் போன்ற பல்வேறு நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாசை நேற்று அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 45 நிமிடம் சந்தித்து விட்டு அங்கிருந்து சென்றார். மேலும் ராமதாசை சமாதானம் செய்வதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சிலரை டாக்டர்.ராமதாஸ் நியமனம் செய்ய உள்ளார். இதனால் தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க.வினர் வருகை தந்துள்ளனர்.
மேலும் ரெயில்வே துறை முன்னாள் மத்திய இணை மந்திரி அரங்கவேலு, பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் ஆகியோர் டாக்டர்.ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இன்றும் பா.ம.க. நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.






