என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள், கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்
- தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இருந்து 4 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. வேட்பாளராக பி.வில்சன் எம்.பி., எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 4 பேரும் இன்று காலையில் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேலம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.








