என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விபத்தில் ரசாயனம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
- லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் ரசாயனம் (ஆசிட்) ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியில் இருந்து வெளியேறி வரும் ரசாயனத்தை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
- நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,500 கன அடியாக வந்தது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,500 கன அடியாக வந்தது. இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
- தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.
மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிவரை விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, கோவை, புதுக்கோட்டை, சிவகங்ககை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
- அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
சென்னை:
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தேர்தல் வியூகத்தை தி.மு.க. அமைக்க உள்ளது.
அந்த வகையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கட்சி வளர்ச்சி பணியை தீவிரப்படுத்தி, அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடர்பாகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அதன்படி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
- 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16127) நாளை (ஞாயிற்றுக்கிழமை), 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்ல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மோஹித் ஹரிஹரன் அதிரடியாக ஆடி 22 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கேப்டன் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 48 பந்தில் 77 ரன்னும், விஜய் சங்கர் 23 பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
- திருக்கோயிலின் உப கோயில்களுக்கு குடமுழு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான, ஆனந்தவல்லி அம்பாள் திருக்கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், வெயிலு கந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 6) குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
- ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது.
- மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
* அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.
* இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.
* 1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.
* தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!
* பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு-காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
* 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்.
* அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் #ஓரணியில்_தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும்!
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- பூந்தமல்லி- போரூர் இடையே இரண்டு முறை சோதனை நடைபெற்றது.
- தற்போது போரூர்- பூந்தமல்லி இடையே சோதனை நடைபெற்றது.
போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கட்ட சோதனையும் UP Line-ல் (பூந்தமல்லி- போரூர்) நடைபெற்றது. தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனை Down line-ல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்றது.
Down line-ல் நடைபெறும் முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலேயே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மீண்டும் இதே வழியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெறும். போரூர்- பூவிருந்தவல்லி இடையிலான தூரம் 9.5 கி.மீ. ஆகும். போரூர்- பூவிருந்தவல்லி இடையே 10 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
போரூர்- பூந்தமல்லி மெட்ரோ பணிகளை அடுத்து போரூர்- பவர்ஹவுஸ், ஆலப்பாக்கம்- சென்னை வர்த்தக மையம் இடையிலான மெட்ரோ பணிகள் அடுத்தாண்டு ஜூலைக்கும் நிறைவு பெறும். கோடம்பாக்கம்- பனகல் பார்க் தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் அடுத்த இரு மாதங்களில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
- மாநிலங்களை ஒழித்துக்கட்டி நாட்டின் கூட்டாட்சி ஏற்பாட்டைச் சிதைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் சதித்திட்டம்.
- அதற்கு ஒரு வழியாகத்தான் தொகுதி மறுசீரமைப்பை பாஜக பயன்படுத்த இருக்கிறது என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோதே தெரிவித்தது நான்' எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி பழனிசாமி எதற்காகப் டெல்லியில் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, ''பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்'' என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வீடு.
பாஜக-வுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ''ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது எப்படிடா? நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இவ்வளவு பெரிய பொய் சொல்லுற'' என்று செந்திலை பார்த்து கவுண்டமணி சொல்லும் காமெடி போல இருக்கிறது.
பாஜக-வைப் பார்த்து கோரிக்கை வைக்கவே பழனிசாமிக்கு துப்பில்லை; வக்கில்லை; மானமில்லை. இவர் 'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்கிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பதுதான் பாசிச பாஜகவின் சதித் திட்டம். இந்தச் சதியை நாட்டிலேயே முதன்முதலாக அம்பலப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர்; தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்னையில் அழைத்து கூட்டம் போட்டது திராவிட மாடல் அரசு; அந்த பிரச்னைக்காக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள் திமுக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இப்படி எதாவது ஒரு வகையில் தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அதிமுக பதிவு செய்திருக்கிறதா? அதனைக் கேள்வி கேட்டால், 'அமித் ஷாவிடம் பேசினேன். ஒன்றிய அரசிடம் குரல் கொடுத்தேன்' என கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி.
பாஜகவின் பாசிசத் திட்டத்தை முதலமைச்சர் அம்பலப்படுத்தியவுடன் அவர்களைக் காப்பாற்றப் புரளி நாடகத்தைக் காட்ட வந்துவிட்டார் கோழைசாமி! இந்தித் திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு அதை எதிர்ப்பேன் என்கிறாரே பழனிசாமி இதுதானே உலக மகா உருட்டு!
மாநிலங்களை ஒழித்துக்கட்டி நாட்டின் கூட்டாட்சி ஏற்பாட்டைச் சிதைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் சதித்திட்டம். அதற்கு ஒரு வழியாகத்தான் தொகுதி மறுசீரமைப்பை பாஜக பயன்படுத்த இருக்கிறது என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும், சின்னப் புத்தி கொண்ட பழனிசாமிக்குத்தான் தெரியாது.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்படும் பழனிசாமி தனது டெல்லிப் பண்ணையார்களின் மனதைக் குளிர்விப்பதற்காக உதிர்க்கும் உளரல்களால்தான் ஒரு சிறந்த அடிமை என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து விட்டு, வெளியே வந்து ஒன்றிய பாஜக அரசைத் தாஜா செய்வதற்காக ஜெயக்குமார் பேட்டி கொடுத்த டபுள் ரோல் கட்சிதானே அதிமுக. அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளே ஒன்று பேசுவதும், வெளியே பாஜகவின் மனம் நோகாமல் பேசுவதும் என இரட்டை வேடம் போட்டவர்தானே பழனிசாமி.
உறுதியாக… அறுதியாக… தாய் மீது ஆணையாக… 'பாஜகவுடன் கூட்டணி இல்லை' என்றெல்லாம் சிலகாலம் வரை சொல்லி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து கடைசியில் கழுத்தறுத்துவிட்டு அமித் ஷா காலில் விழுந்த கோழை பழனிசாமி பேசுகிறார். 'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்று.
பாஜக கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்டவர். தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொன்னால் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்ற பழ(னிசாமி)மொழிதான் நினைவுக்கு வருகிறது.
பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே U-Turn அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது.
இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.
- அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
- நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.
கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அந்தந்த மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா பாதித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் வேலை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.






