என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
- நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.
நீதித்துறையின் மாண்பையும். சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.






