என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
- கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-
கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?
- அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பேசியதாவது:-
கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் காலேஜ் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை கொண்டு வந்தவன் வேல்முருகன், கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். கூத்து என்றால் எனது தமிழனின் மரபு வழி கலையாகும், அதில் என்ன உங்களுக்கு குறைச்சல்.
எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி போராளிகளிடம் மைக் நீட்டி கேளுங்கள். அவர்களுக்கு போராளிகள் பற்றி தெரியாது. அவர்களின் உலகம் வேறு. எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்கிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர். அவர்கள் தான் தற்குறி.
உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். இவர்கள்தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை.
ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
நீங்கள் எல்லாம் 10-வது 12-வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். கடலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல்கலாம்களாக வரவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு பத்திரிகை இல்லாமல் ஒரு புகைப்படக்காரர் இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு கோடி ரூபாய் நிதியை அறிவித்து விஞ்ஞான கல்விக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதவியவன் நான் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார்.
மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்து வருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
- துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
- கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்;
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.
ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை!
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;
கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
- தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார்.
விருதுநகர்:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க.வுன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார். இதன்பின் தியானத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இதன்பின்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு நள்ளிரவில் தியானத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல சலசலப்புகள் ஏற்பட்டது.
- இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.
- 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.
இதனால் லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் என இருமார்க்கமாக செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ரத்தால் இரு மார்க்கத்திலும் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 12-ந்தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சிட்லபாக்கம்: சிட்லபாக்கம்- பஜனை கோவில் தெரு, மெய்கை விநாயகர் கோவில் தெரு, நவின் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் ஜெனித், சங்கராபுரம், ஏடிபி அவென்யூ, என்எஸ்கே தெரு.
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோவில் தெரு, துலுக்காத்தமன் கோவில் தெரு.
மேடவாக்கம்: மேடவாக்கம்- அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி, வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஜிக்மா பள்ளிப் பகுதி.
அம்பத்தூர் ரியல் எஸ்டேட், அய்யப்பாக்கம், ஆதிபேட்டை 3-வது மெயின் ரோடு, வானகரம் சாலை, எம்டிஎச் ரோடு, டிபி 67 முதல் 94, பெரியார் காலணி, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், பிகேஎம் ரோடு, கல்யாணி எஸ்டேட், அலக் ரெட்டி குடியிருப்பு, குப்பம், சங்கர் ஷெலிங், நடேசன் நகர், 14-வது தெரு, வள்ளலார் தெரு.
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- கோவை மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
- பில்லூர் அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.
- பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியான முழு கொள்ளளவை எட்டியது.
அணையின் முழு கொள்ளளவான 100 அடியை எட்டிய நிலையில், 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.
அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- நீலகிரிக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மசாவட்டங்களுக்கும் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






