என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
    • தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை மற்றும் தமிழகத்தின் முக்கியப் பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ஆதியோகி ரத யாத்திரை நேற்று (25/12/2025) மதுரையை வந்தடைந்தது. அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

    ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென்கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

    அந்த வகையில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

    தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    தென்மண்டல யாத்திரை தேனி வழியாக இன்று மதுரையை வந்தடைந்தது. நேற்று (டிசம்பர் 25) முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரதம் பயணிக்க உள்ளது.

    மதுரையில் ஆதியோகி ரதம் ஜங்ஷன், அண்ணா நகர், பி.பி.குளம் போன்ற முக்கியப் பகுதிகள் வழியாக பயணிக்க உள்ளது. குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், செல்லூர் திருவாப்புடையார் மற்றும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள் வழியாக செல்ல உள்ளது.

    மதுரையை தொடர்ந்து, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் இந்த ரத யாத்திரை தொடர உள்ளது. அதனைத் தொடர்ந்து டிச'31-ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    பின்னர் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தென்காசி, சுரண்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கூடங்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாகப் பயணிக்கும் இந்த ரதமானது, பிப்ரவரி 1 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, நாட்டாலம், மார்த்தாண்டம், மேல்புறம் மற்றும் புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகப் பயணிக்க உள்ளது.

    ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகச் சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

    இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாகக் கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

    • ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி 8 நாட்கள் தொடர்ச்சியாக விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்தோடு தலைமை கழகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள். 8 நாட்களில் 9 ஆயிரம் பேர் வரையில் விருப்ப மனுக்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேலும் 4 நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது.
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    சென்னை:

    பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

    இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

    டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்பு மணி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் கடந்த 18-ந் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

    அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.

    கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26-ந் தேதி) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு தினம், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து புறப்படும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்துக்கும் செல்ல வேண்டும்.

    மேலும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற ஜனவரி 5-ந்தேதிவரை அமலில் இருக்கும்.

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் தவிர மற்ற அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன் மற்றும் மேக்சி-கேப் வாகனங்கள், எச்.பி.எப். கோல்ப்லிங்ஸ் சாலையில் நிறுத்தப்படும். அங்கு இருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுலா பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், தலைகுந்தாமட்டம் கோழிப்பண்ணை புதுமந்து வழியாக ஸ்டிபன்ஸ் சர்ச் வந்தடையும். புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.

    குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர அனைத்து சுற்றுலா வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

    கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வந்தடையலாம்.

    ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சேரிங்கிராஸ், பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி நோக்கி திருப்பி விடப்படும்.

    அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோலியம், கியாஸ் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஜனவரி 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதி இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர்.
    • நல்லகண்ணு ஐயா நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்ததாள்

    விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

    தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல கண்ணுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    • தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
    • வெள்ளி இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்வு.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 254 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    • 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • முகவரி மாற்றம் கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி, அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (நாளை), 28-ந்தேதி (நாளைமறுநாள்) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 79 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம். சிறப்பு முகாம்கள் சீராக நடக்கவும், இந்த திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.

    • பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.
    • மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே பா.ம.க.வில் தந்தை- மகனுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது.

    இந்த நிலையில், பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பா.ம.க. சமூகநீதிப் பேரவை பெயரில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    * பா.ம.க. பெயரில் தேர்தல் கூட்டணி, அரசியல் முடிவுகளை ராமதாசே மேற்கொள்ள வேண்டும்.

    * பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.

    * பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது.

    * மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பிதான் ஹசாரிகாவிற்கு, வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
    • வேலை முடிந்து வந்த பிதான் ஹசாரிகா மதுபோதையில் படுத்து தூங்கினார்.

    அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (வயது 33). இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

    பிதான் ஹசாரிகாவிற்கு, வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

    தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம், பிதான் ஹசாரிகா பேசி வந்தார். கணவரின் செல்போனை வாங்கி பார்த்த மனைவி ஜிந்தி, கணவரை கண்டித்தார். ஆனால் அவர் பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை

    சம்பவத்தன்று ஜிந்தி வெளியில் சென்று இருந்தபோது, பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜிந்தி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவர் மீது ஜிந்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை கண்டித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பிதான் ஹசாரிகா, தனது மனைவி ஜிந்தியை, சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கு சென்று விடுமாறு மிரட்டியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கணவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த பிதான் ஹசாரிகா மதுபோதையில் படுத்து தூங்கினார். கணவர் மீது கோபத்தில் இருந்த ஜிந்தி, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பிதான் ஹசாரிகாவின் மர்ம உறுப்பை அறுத்து வீசினார். பின்னர் கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அறையில் இருந்து வெளியே வரமுடியாத பிதான் ஹசாரிகா, கத்தி கூச்சல் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிதான் ஹசாரிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிந்தியை கைது செய்தனர்.

    • சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
    • சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்

    நாம் வாழும் பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி கடல் தான். ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா என 7 கண்டங்களாக பிரிந்து கிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்பது கடல் அலைகள் தான்.

    ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வது தான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள் தான்.

    'அழகு எங்கு இருக்கிறதோ, அங்கு தான் ஆபத்தும் இருக்கும்' என்று கூறுவது போல், இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.

    அதே ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளை பலமாக தாக்கியது.

    என்னமோ... ஏதோ... என கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடிய போதும் இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி ஏராளமானோரை வாரிச் சுருட்டிக் கொண்டான்.

    இதில் 14 நாடுகளிலும் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்தார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.

    தமிழகத்தையும் இந்த சுனாமி விட்டுவைக்கவில்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டியது.

    சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள் மட்டும் மறையவில்லை.

    அன்றைக்கு சிறுவயதில் இறந்து போனவர்கள், உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு திருமணமாகி குடும்பமாக வாழ்ந்திருப்பார்கள். நடுவயதை ஒத்தவர்கள், பேரன், பேத்தி என்று வாழ்வை ரசித்து வந்திருப்பார்கள்.

    இறந்தவர்கள் என்றும் மீள முடியாது என்பது இயற்கையின் இரக்கமற்ற நியதி. 'காலங்கள் கரைந்து போனாலும் கண்ணீர் மட்டும் மறையவில்லையே' என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரித்துச்சென்று பெருந்துயரம் தந்த சுனாமி வந்து சென்று 21 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும், கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

    அந்த வகையில் சுனாமி தந்த சோகத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வசிக்கும் கடலோர மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி பல இடங்களில் கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி இறந்து போனவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
    • ‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.

    புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    'பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    'பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    சாலையின் நடுவே 'கேக்' வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடந்த ஆண்டை போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறினால் ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு எவ்வளவு நேரம் அனுமதிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பைக் ரேசில் ஈடுபட்டதாக 24 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    • கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும்.

    சென்னை:

    சென்னையில் முதல் கட்டமாக பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடங்கள் வருகிற 2027-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர, ஒவ்வொரு வழித்தடத்திலும் தனித்தனியே நீட்டிப்பு சேவையும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் சென்னை ஐகோர்ட்டு (7 கி.மீ) வழித்தடம் 1-ல் தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி (21 கிலோ மீட்டர்) நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில், தென்சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இதற்காக சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவர்கள் 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க உள்ளனர். இதற்காக ரூ.96.19 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும். போக்குவரத்து நெரிசலற்ற விரைவான சேவையும் கிடைக்கும். தென்சென்னையில் தினசரி நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ வழித்தடம் ஒன்று நீட்டிப்பு சேவை இருக்கும். இது ஜி.எஸ்.டி சாலை, வேளச்சேரி ரோடு ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கும்.

    வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஏராளமான தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதனால் ஜி.எஸ்.டி ரோடு, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசல் மெட்ரோ ரெயில் சேவை மூலம் குறையும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

    ×