என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
- பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் (வயது 27) என்ற வாலிபர் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வரும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான சுரேஷ், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நேற்று அந்த குழு நெல்லைக்கு வந்தது. தொடர்ந்து கவின் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் நேரில் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளிட்டவர்களிடமும் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் போன்ற பலரிடமும் தகவல்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொடர்ந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசுக்கும் சமர்ப்பித்து ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு வலியுறுத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
- குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக.
- தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* என் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.
* சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைப்போம்.
* மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக
* நம்முடைய குலதெய்வம், வழிகாட்டிதான் ராமதாஸ். அவர் உள்ளத்தில் இருக்கிறார்.
* சில நேரத்தில் சாமிக்கு கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா எடுக்க வேண்டும்.
* தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.
* அடுத்த 6 மாத காலத்திற்கு ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
* திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பாமக-வின் இலக்கு.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
சமீப காலமாக அதிகரித்து வரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் அன்வர் ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
- தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து அன்வர் ராஜா விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக புலவர் இந்திரகுமாரி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
- 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.
* எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
* எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
* வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.
* சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
* தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
* 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்றார்.
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
- ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம்.
- மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினை அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நான் சேலம் மாவட்டத்தில் இருக்கின்றவன். நம்முடைய மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அடைகிறேன். 2011-2021 வரை சேலம் மாவட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஆங்காங்ககே இருக்கின்ற ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் பெய்கின்ற நீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏரிகளில் அள்ளப்படும் வண்டல் மண் நம்முடைய விளை நிலங்களில் இயற்கை உரங்களாக பயன்படுத்தினோம்.
அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தினோம். நம்முடைய மாவட்டம் விசை தறி நிறைந்த பகுதி. இன்றைய தினம் விவசாய தொழில் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சியினுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தினால் இந்த 2 தொழில்களும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருகின்றபோது இந்த விவசாயிகளும், விசை தறிதொாழிலாளர்களுக்கும் உதவி செய்யப்படும். மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பொதுக்குழு மேடையில் ராமதாசுக்காக இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம். மேலும் பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்காவிட்டால் தமிழக அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்ததாக ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பல்லாவரம்:
பல்லாவரத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
* தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன்.
* கல்வியும் மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக உள்ளன.
* சென்னை புறநகர் பகுதியில் மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
* காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது.
* ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் தான்.
* மனிதனின் அடிப்படை தேவையான உடை, உணவு எளிதாக கிடைத்தாலும் இருப்பிடம் கிடைப்பதில்லை.
* பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
* 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன.
* கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம்.
* ரூ.1,672 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டாக்களை தற்போது வழங்கி உள்ளேன்.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* கலைஞர் ஆட்சிக்கு பின் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்.
* வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார்.
* அடிப்படை தெரியாத அறிவிலிபோல் அறிக்கை வெளியிடுகிறார்.
* மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.
* இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம் என்றார்.
இதன் பின், பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லாமலும், அன்புமணி தலைமையிலும் நடைபெறும் முதல் பொதுக்குழு இதுவாகும்.
- தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
- மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை தீர்க்கும் சேவைகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 2 விழாக்களில் பங்கேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
இதே போல் பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






