என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஓசூர்:
தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்கியது. வருகிற புதன்கிழமை (17-ந் தேதி) வரை பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களாக கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால், ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதி வரை 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், ஓசூர் நகர பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
- இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது
இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக மாநாடு நடைபெறும் திடலுக்கு தினமும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் மாநாடு நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் வருகிற 20-ந் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலமைச்சர் சேலம் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பொறுப்பாளராக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வரும், போலீஸ் சூப்பிரண்டுமான லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தி.மு.க. மாநாட்டு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சிவராமன், அன்பு, பேரூர் செயலாளர்கள் வெங்கடேஷ், பாபு, முன்னாள் பேரூர் செயலாளர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
- கடந்த 2 நாளில் பேருந்து, ரெயில், விமானம் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என மொத்தமாக 5 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில்நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரெயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் பேருந்து, ரெயில், விமானங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
- ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.
- காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.
மதுரை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.
* காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.
* காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.
* காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.
* ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை.
* அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
- மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
- போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டது.
சென்னை:
போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை விமான நிலையம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதிக புகைதரும் பொருட்களை எரிக்கவேண்டாம் என்று ஏற்கனவே விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்தனர்.
இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருந்ததால் புகையும் சேர்ந்து மூழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகையாகக் காட்சி அளித்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையும் தெரியாத அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப் பட்டன.
இதேபோல் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள் புகை-பனிமூட்டம் காரணமாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் என சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை சீரானது.
- சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
- மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் நாளடைவில் பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் எரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் போகி பண்டி கை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.
அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.
பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. 20-ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது.
இப்படி மெதுவாகவே செல்ல முடிந்ததால் பயண நேரம் அதிகமானது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய பயண நேரம் ஒரு மணி நேரமானது.
சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.
இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். சென்னை மாநகரில் போகி புகையால் பெருங்குடி பகுதியில் காற்று மாசு மிக அதிக மாக காணப்பட்டது.
பெருங்குடி பகுதியில் காற்றின் தர குறியீடு 289-ஐ எட்டி இருந்தது. இந்த அளவு மணலியில் 272 ஆக பதிவாகி இருந்தது.
எண்ணூரில் 232 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 216 ஆகவும், ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் 207 ஆகவும் காற்றின் குறியீட்டு அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
போகி புகை மூட்டத்துடன் டயர், டியூப்களை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையும் கலந்தது. இதனாலேயே காற்று மாசு அதிகரித்து உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்தனர். மூச்சுத் திணறலால் அதிக பாதிப்புகளை அவர்கள் சந்தித்தனர். போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டயர், டியூப் உள்ளிட்ட மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரித்து நச்சுப்புகையை பரவ விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா.
- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர்,"கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும். இல்லையென்றால் ஒரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது. அப்போது பாஜக ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்தார். அதனால்தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்" என்றார்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை.
- 2021ல் இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மனித- வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
2021 அரசாணைப்படி, மோதல்களில் மனித உயிர் இழப்பு, நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், மனித, வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்குமாறு அரசுக்கு முறையீடுகள் வந்தன.
இந்நிலையில், நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

- 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.
தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
- சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.
சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.
பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
- 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள்.
- விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தமிழக அரசு சார்பில், 2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
2023ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, பத்தமடை பரமசிவத்திற்கு பேரறிஞர் அண்ணா விருது, உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது, கவிஞர் பழநிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருது, எழுச்சிக் கவிஞர் முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, ஜெயசீல ஸ்டீபனுக்கு திரு.வி.க. விருது, முனைவர் இரா.கருணாநிதிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கி கவுரவித்தார்.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டது.






