என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.
ஊழியர்கள் மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
- பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்), முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஒட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் மற்றும் பெண்) நிலைகளில் 59 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/- 2024. பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.
- வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
- பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மல்லிகை பூ போலவே பிச்சி பூ, கனகாம்பரம் கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் புதிதாக அமைய உள்ள ரெயில் நிலையம் இடையே உயர்மட்ட நடைபாதை அமைக்க நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5,900 ச.மீ நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நடைபாதை 400மீ நீளத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும்.
- மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை:
தமிழர்கள் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே வருகிற 15,16,17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 15, 16, 17 தேதிகளில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக தைப் பொங்கல் திருநாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் பழக்கமாக உள்ளது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி முருகப் பெருமானை தரிசிக்க கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களில் திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாளை ( திங்கட்கிழமை) பொங்கலன்று முருகப்பெருமானை தரிசிப்பதற்காக திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் காணப்பட்டது.
கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (15-ந் தேதி) தை 1-ந் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
- ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
புதுச்சேரி:
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.
படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.
- பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
சென்னை :
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
* கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம். அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
* கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.
* பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் போது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக செய்து தரப்படும்.
* ஜன. 24-ந்தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
* கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற இடமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திகழ்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த தமிழர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பின் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது அதிகரித்து வருகிறது.
இதற்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரியும் அமைக்கப்பட்டது. இருப்பி னும் போதிய இடவசதி இல்லாமல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் முழுமையாக ஜல்லிக்கட்டு போட்டியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில்தான், சட்ட மன்ற கூட்டத்தொடரில் விதி என் 110-ன் கீழ் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. தற்போது இந்த மைதான அரங்கிற்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பழமை மாறாமல் மன்னர் காலத்து அரண்மனை போல் இந்த ஏறுதழுவுதல் அரங்க முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு அரங்கில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை, காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடி வாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தண்ணீர் தொட்டி, மருந்தகம், கால்நடை மருத்துவ வசதி, கழிப்பறை, பத்திரிகையாளர் அறை, அலுவலர்கள் ஓய்வு அறை, என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.
இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் சுமார் 10, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் அமர்ந்து பார்க்கும் வகையில் கண் கவர் வேலைப்பாடுகளுடன் அரங்கம் அமைக்கப்பட்டது. மேலும் இந்த அரங்கின் இரண்டு பகுதிகளில் மிகப் பெரிய எல்.இ.டி. திரை மூலம் ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்கும் வகையில் அகன்ற திரை அமைக்கப்பட்டுள்ளது.
பழமை மாறாமல் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வாடிவாசல் எவ்வாறு அக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று இந்த அரங்கில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிவாசல் மேலிருந்து விழா குழுவினர், வர்ணனையாளர் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பரிசு பொருட்கள், அறிவிக்கும் வகையிலும் ஜல்லிக் கட்டை வர்ணனை செய்யும் வகையிலும் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வாடிவாசல் பின்புறமாக ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக வருவதற்கு ஏதுவாக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்று வரும் வகையில் நீண்ட தொலைவில் இரும்பு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கும். காளை உரிமையாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட இந்த கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஏறு தழுவுதல் அரங்கம் வடிவமைக்கப்பட் டுள்ளது. அரங்கம் முன்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று பாய்வது போன்றும், அதனை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்றும் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன.

தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், பரிசுப் பொருட்கள் வைப்பு அறை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், ஓய்வு அறை, காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவி கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யப்ப டும் இடம், ஜல்லிக்கட்டு அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.
முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தனித்தனியே அறைகள், உணவு அறை, அனைத்து வசதியுடன் கூடிய தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியைக் காண மதுரை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக தார்ச் சாலை அமைக்கபட்டுள்ளது.
இதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலங்காநல்லூர்-வாடிப் பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து ஜல்லிக்கட்டு அரங்கிற்கு விரைந்து வர சின்ன இலந்தைகுளம், இடைகரை பாலம் முதல் அரங்கிற்கு 3.3 கிலோ மீட்டர் தூரம் வரை தனியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவே பூச்செடிகள், அரங்கம் முன்பாக பசுமையான புல் தோட்டம், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டை பறைசாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதல்வர் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கிறார். திறப்பு விழா நாளில் உலகத் தரத்தில் மிக பிரமாண்டமாக இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- ஓ.பன்னீர்செல்வம் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில், தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 14, 2024
திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.…
- ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
மதுரை:
தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்பாட்டையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டும், பொங்கலை வரவேற்கும் விதமாகவும் நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
இதில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜல்லிக்கட்டு நடக்கும் இந்த 3 இடங்களிலும் கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளது.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
குறிப்பாக, அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 3,677 காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள், அலங்காநல்லூரில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு ரூ.26½ லட்சம் செலவில் கேலரி, தடுப்பு கட்டைகள் கட்டும் பணி, வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் அழைத்து வரும் இடம், பார்வையாளர்கள் கேலரி மற்றும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகள் முடியும் நிலையில் உள்ளது. இன்று மாலைக்குள் அவை நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பயிற்சி பெற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்க தயார் நிலையில் இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.
நாளை மறுநாள் (16-ந்தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அரசு வழிகாட்டுதலுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி நடைபெறும் என்றும், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் வழங்கும் ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் கன்று குட்டியுடன் நாட்டு பசுமாடும் வழங்க உள்ளோம். சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக ஒரு கார் மற்றும் 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதனை கலெக்டர் சங்கீதா தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவுசெய்து தகுதிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். பாலமேடு பேரூராட்சியின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அரசு வழிகாட்டுதல் படி 17-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அலங்காநல்லூருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். அவர்களுக்கு தனியாக மேடை வசதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது.
- போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
- வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனி பனிமூட்டம் நீடிக்கும்.
தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.
அதன்படி போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பனிமூட்டத்தால் திணறிவரும் வாகன ஓட்டிகள் அதிக புகைமூட்டமும் கூடியதால் அவதியடைந்தனர்.
இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கும்.
அதேபோல் வட தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனிமூட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.






