என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் “பொங்கல் சிறப்பு சந்தை” அமைக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் "பொங்கல் சிறப்பு சந்தை" அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு இன்று அதிகாலையில் ஏராளமான வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இதனால் கோயம்பேடு சிறப்பு சந்தையில் இன்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. தொடர்ந்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 150 லாரி களில் கரும்பு விற்பனைக்கு குவிந்த நிலையில், இன்று மேலும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு கட்டுகள் குவிந்ததால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. கும்மிடிப் பூண்டி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வாக னங்களில் மஞ்சள் கொத்து கள் குவிந்ததால் நேற்று ரூ.80 வரை விற்கப்பட்ட மஞ்சள் கொத்து கட்டு இன்று ரூ.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மிச்சாங் புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக இஞ்சி கொத்துகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான இஞ்சி கொத்துகள் மட்டுமே கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது இதையடுத்து நேற்று ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது.
- கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம்.
- ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்.
- பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன்.
- உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள்-பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஆண்டுக்கோர் நாள், அருமை மிகு திருநாள் பொங்கல் புதுநாள்
இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா.
களம் காண்பான் வீரன் என்றால்-நெற்களம் காண்பான் உழவன் மகன்.
போர் மீது செல்லுதலே வீரன் வேலை-வைக்கோற்
போர் மீது உறங்குதலே உழவன் வேலை.
பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம்-நாற்று
முடி பறித்தல் உழவன் நோக்கம்.
உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு;
வேற்றுமையோ ஒன்றே ஒன்று.
உழவன் வாழ வைப்பான்; வீரன் சாக வைப்பான்' என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள்.
இதுதான் தமிழர் பெருநாள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை.
உழவு என்பது தமிழர்களின் தொழிலாக இல்லாமல் பண்பாட்டு மரபாக இருந்தது. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வரும் திருவிழாவாக பொங்கல் இருக்கிறது. தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெரு நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 14, 2024
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி. pic.twitter.com/h1jDdOYrta
பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியும் சொல்லாத பல திட்டங்களைச் செய்து காட்டியும் சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்ற முதல் கையெழுத்தை இட்ட நான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும் வழங்கி வருகிறேன்.
கொரோனா காலத்தில் அனைத்துக் குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய இந்த அரசு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. பெரும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி கோடிக்கணக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது திமுக அரசு.
பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.
அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
- ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரசந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பானை, கரும்பு, வாழை மரம், மாடுகளுக்கான கயிறுகள், மஞ்சள் குழை, வாழைபழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், மாடுகள் மீது பூச கூடிய வண்ண பொடிகள், கோலப்பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், காய்கறிகளும் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
வாரசந்தையில் பொங்கல் விற்பனைக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான வியாபாரிகள் பொருட்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதனை வாங்க ஊத்தங்கரை, மத்தூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி மாவட்டத்தில் இருந்து இருமத்தூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரசந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று ஆடுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.
- இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
- கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
சென்னை:
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மொத்தமாக 20,084 இயக்கப்படுகிறது. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்ட தடப் பஸ்கள் 9,103, உதிரி பஸ்கள் 1,361 என மொத்த பஸ்களான 10,464 பஸ்களில் 4,446 பஸ்கள் நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் இருந்து பொங்கலுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு நாளில் அதிகபட்சம் இவ்வளவு பஸ்கள் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பண்டிகைக்கு முன் உள்ள மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணிப்பார்கள்.
இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்றைய நாளில் (13-ந்தேதி) தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது.
மொத்தமாக 1,44,778 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இச்சிறப்புப் பஸ்கள் இயக்கத்தை கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தப் பண்டிகை சிறப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், எனது தலைமையிலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் கழகங்கள் சார்பிலும், பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதியதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கினார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் கிராமிய விழா நடைபெற்றது. மாட்டு வண்டி பயணம், ஒயிலாட்டம், சிலம்பம், கபடி , கோலபோட்டி, கயிறு இழுத்தல் போட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் மாட்டு வண்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் பயணம் செய்து விழா மேடைக்கு வந்து அடைந்தார்.
இதை தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகி அணியில் இணைந்து போட்டியிட்டார். மறுமுனையில் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் ஒரு அணியாக கலந்து கொண்டனர். இரு அணிகள் மோதியதில் ஜி. கே.வாசன் அணி கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றது. தான் பெற்ற வெற்றியை இளைஞர் அணிக்கும் மாணவர் அணிக்கும் சமர்ப்பித்தார்.
இதனை அடுத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினர் மற்றும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படுவது வதந்தி என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். வதந்திக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு, அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல், நான் ராமர் கோவிலுக்கு செல்வேன் தரிசிப்பேன் . வருகின்ற 22-ந் தேதி என்னுடைய கட்சி தொண்டரின் திருமணத்தை நான் திருவாரூரில் நடத்தி வைக்கிறேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் நான் கோவிலுக்கு சென்று நிச்சயம் தரிசிப்பேன்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பல வசதிகள் இருக்கலாம் , அதில் மாற்று கருத்து கிடையாது. அது எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது தான் வர வேண்டும். அங்கு மெட்ரோ ரெயில், போதிய அளவில் பஸ் போக்குவரத்து கிடையாது. விளம்பரத்திற்காக மக்களை அலைக்கழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது.
ஆட்சியாளர்களின் தவறை சாதாரண மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தவறுகளுக்கான பாடத்தை அவர்கள் தங்களுடைய வாக்கின் மூலம் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.
- விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
- விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
- நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் உள்ள ரேசன் கடையில் கடந்த 10-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக சுதா என்பவர் பணியாற்றி வருகிறார் . ஆனால் அவருக்கு பதிலாக அவரது தந்தை முனிகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாராம். நேற்றும், முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
அப்போது, அங்கு சென்ற ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ரஜினிகாந்த், அவரிடம் கடையின் விற்பனையாளர்தான் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பணம் கட்டுகளை எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்காமல் அங்கிருந்து சென்று விட்டார். கடையில் பொருட்கள் எல்லாம் அப்படியே கிடக்க, பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்க சென்ற ஏராளமான குடும்ப அட்டைதார்கள் 2 மணி நேரமாக கடையின் வாசல் முன்பு காத்து கிடந்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், காத்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். அப்போது அங்கு வந்த முனி கிருஷ்ணனை அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கடையில் விற்பனையாளருக்கு பதிலாக அவரது தந்தை பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி வருவதாகவும், பொது மக்களை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முனி கிருஷ்ணன் தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
- திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.
இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.
தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.
"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.
கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.
பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.
மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.
திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.
எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது.
- ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் தொடர்விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே வாரவிடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறை தொடர் விடுப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊட்டியில் குவிந்து அங்குள்ள பகுதிகளை உற்சாகமாக சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர். எனவே அங்கு தற்போது வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் அங்குள்ள சாக்லெட் கடைகளிலும் இனிப்பு பண்டங்களின் விற்பனை களைகட்டி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு அணிவகுத்து வந்து செல்கின்றனர். எனவே நீலகிரி மாவட்ட எல்லையின் நுழைவு பகுதியான கக்கநல்லா சோதனைச்சாவடியில் இருந்து ஊட்டி வரை தெப்பகாடு மற்றும் மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் அந்தந்த பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.
ஊழியர்கள் மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
- பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்), முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஒட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் மற்றும் பெண்) நிலைகளில் 59 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/- 2024. பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.






