என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.
- அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
ஜாதி பேதங்கள் கடந்து நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாளே தை பொங்கல் திருநாள்.
மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளிலே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது.
கடந்த மாதம் சென்னையில் பெரும் மழை பாதிப்புகள், அதே போல தென் மாவட்டங்களில் மிகபெரிய வெள்ள பாதிப்பில் சிக்கி மக்கள் பட்ட வேதனையையும் நாம் பார்த்தோம்.
இரண்டுமே காலநிலை மாற்றத்தால் வரக்கூடிய பாதிப்புகள் என்பதை நாம் உணரவேண்டும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து நமது எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.
ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!
ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்! pic.twitter.com/WM325QHfDC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 15, 2024
- பொங்கல் திருநாள் இயற்கையை வாழ்த்தும் நாள்.
- பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியை மக்களுக்கு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள். சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
- பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
சென்னை:
நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்து செய்தியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
- வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமாக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
- பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.
- சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை-1 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி காலை 10 மணி வரை பிறகு பஞ்சமி.
நட்சத்திரம் : சதயம் நண்பகல் 1.05 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பொங்கல் பண்டிகை, சபரிமலை மகரஜோதி தரிசனம்
தைப் பொங்கல். உத்தராயண புண்ணிய காலம். பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. சபரிமலையில் மகரஜோதி தரிசனம். திருமயிலை கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - நலம்
கடகம் - நட்பு
சிம்மம் - யோகம்
கன்னி - இன்பம்
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - உவகை
தனுசு - நட்பு
மகரம் - பாராட்டு
கும்பம் - ஆதரவு
மீனம் - செலவு
- நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறை.
- மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14-01-2024) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 (நேற்று) நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.
சென்னை:
சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.
கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காகக் குழந்தை களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று அடையாள அட்டைகளை கைகளில் கட்டி விட திட்டமிடப்பட்டு உள்ளது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
- தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.
அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.
- மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது .
- 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு ஏட்டிவிடும்.
தமிழ்நாடு அரசு இருமொழி கொள்கையை மட்டும் பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டது. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக, மைக்ரோசாப்ட் டீல்ஸ் திட்டம் என்னும் புதிய திட்டத்தை நாட்டிலே முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் எனக் கூறியிருந்தார். மேலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் கொண்டு வரும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, ஒரு போதும் மும்மொழிக்கொள்கையே தமிழ்நாடு அரசு ஏற்காது. இரு மொழி கொள்கை மட்டுமே தொடரும் என தெரிவித்துள்ளது. அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திணிக்கவோ கூடாது, தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. உதாரணமாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதம் ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதத்தை, 2019-20 ஆம் கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை ஏட்டிவிடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்வி கொள்கையில் இணைத்துவிட்டு , தேசிய கல்விக்கொள்கையின் படி தமிழ்நாடு அரசு செயல்படுவது எனக் கூறுவது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டிற்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
- வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
மேலும் அதிலிருந்து எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது பற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இருப்பது அதில் பதிவாகி இருந்தது.
எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அந்த காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
- மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.
நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.
திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.
- மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.
இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






