search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன்.
    • உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள்-பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஆண்டுக்கோர் நாள், அருமை மிகு திருநாள் பொங்கல் புதுநாள்

    இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா.

    களம் காண்பான் வீரன் என்றால்-நெற்களம் காண்பான் உழவன் மகன்.

    போர் மீது செல்லுதலே வீரன் வேலை-வைக்கோற்

    போர் மீது உறங்குதலே உழவன் வேலை.

    பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம்-நாற்று

    முடி பறித்தல் உழவன் நோக்கம்.

    உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு;

    வேற்றுமையோ ஒன்றே ஒன்று.

    உழவன் வாழ வைப்பான்; வீரன் சாக வைப்பான்' என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள்.

    இதுதான் தமிழர் பெருநாள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

    உழவு என்பது தமிழர்களின் தொழிலாக இல்லாமல் பண்பாட்டு மரபாக இருந்தது. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வரும் திருவிழாவாக பொங்கல் இருக்கிறது. தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெரு நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியும் சொல்லாத பல திட்டங்களைச் செய்து காட்டியும் சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்ற முதல் கையெழுத்தை இட்ட நான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும் வழங்கி வருகிறேன்.

    கொரோனா காலத்தில் அனைத்துக் குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய இந்த அரசு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. பெரும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி கோடிக்கணக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது திமுக அரசு.

    பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.

    அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×