search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடையில் கவுன்சிலர்-தி.மு.க பிரமுகர் இடையே கடும் வாக்குவாதம்
    X

    தி.மு.க பிரமுகர் முனிகிருஷ்ணனை அதிகாரிகள், கடையிலிருந்து வெளியேற்றிய காட்சி.

    பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடையில் கவுன்சிலர்-தி.மு.க பிரமுகர் இடையே கடும் வாக்குவாதம்

    • முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
    • நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் உள்ள ரேசன் கடையில் கடந்த 10-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக சுதா என்பவர் பணியாற்றி வருகிறார் . ஆனால் அவருக்கு பதிலாக அவரது தந்தை முனிகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாராம். நேற்றும், முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .

    அப்போது, அங்கு சென்ற ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ரஜினிகாந்த், அவரிடம் கடையின் விற்பனையாளர்தான் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபமடைந்த முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பணம் கட்டுகளை எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்காமல் அங்கிருந்து சென்று விட்டார். கடையில் பொருட்கள் எல்லாம் அப்படியே கிடக்க, பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்க சென்ற ஏராளமான குடும்ப அட்டைதார்கள் 2 மணி நேரமாக கடையின் வாசல் முன்பு காத்து கிடந்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், காத்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். அப்போது அங்கு வந்த முனி கிருஷ்ணனை அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த கடையில் விற்பனையாளருக்கு பதிலாக அவரது தந்தை பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி வருவதாகவும், பொது மக்களை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முனி கிருஷ்ணன் தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×