search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு
    X

    போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

    • மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
    • போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டது.

    சென்னை:

    போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை விமான நிலையம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதிக புகைதரும் பொருட்களை எரிக்கவேண்டாம் என்று ஏற்கனவே விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்தனர்.

    இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருந்ததால் புகையும் சேர்ந்து மூழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகையாகக் காட்சி அளித்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையும் தெரியாத அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப் பட்டன.

    இதேபோல் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள் புகை-பனிமூட்டம் காரணமாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் என சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை சீரானது.

    Next Story
    ×