என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஸ்ரீராமன், சீதையால் பூஜிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயமாகும். இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ராமேசுவரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.
உத்தரபிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி ராமரின் குழந்தை வடிவிலான சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
இதற்காக கடந்த 12-ந்தேதி முதல் விரதம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி 20-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் வருகை தர உள்ளார். ராமரின் வாழ்க்கை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அப்போது 22 தீர்த்தங்களிலும் புனித தீர்த்தத்தை சேகரிக்கிறார். பின்னர் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்வதுடன் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
இதன் பின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்கிறார். 21-ந்தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள விபீஷணனுக்கு ஆறுதல் கூறிய வரலாற்றை எடுத்துரைக்கும் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.
பின்னர் கலசத்தில் சேகரித்த, 22 புனித தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு அன்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். 12.25 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி மண்டபத்தில் உள்ள ஹெலிபேடு தயார்படுத்தும் பணி நடைபெற்று வரும் காட்சி
முன்னதாக பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராமேசுவரத்திற்கு பிரதமர் வருகையை முன்னிட்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்துறையினர் கப்பல்கள் மற்றும் கரையோரம் பகுதிகளில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவேக ரோந்து படகுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதே போன்று ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செ.சிவ ராம்குமார் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர்.
பிரதமர் மோடி இரவு ஓய்வு எடுக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 பேர் முதல்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மண்டபத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள உள்ளனர்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராமேசுவரம் வருகை தந்த பிரதமர் மோடி, தற்போது சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
- சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.
மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.
- ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
- ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் மழை இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி அந்த நேரத்தில் அங்கு குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக கவியருவியில் கடந்த சில வாரமாக தண்ணீர் வரத்து சற்று குறைந்தது.
இருப்பினும் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.
காணும்பொங்கலையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள், கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் குளிப்பதற்கு போதிய இடமின்றி சுற்றுலா பயணிகள் தவித்தனர். இருந்த போதிலும் பலரும் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.
சில சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரு பகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டை போல் தேங்கிய தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.
பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்துள்ளனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.முத்துராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிகட்டு போட்டியினை ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய 3 கிராமத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்துவர்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் அரசிடம் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளை அடக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான பெயர் பதிவும் தொடங்கி நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காளை பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் ஜல்லிகட்டு காளைகளுக்கு கற்பூரம் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்ட 250 காளையர்கள் களத்தில் காளைகளை அடக்க களமாடினார்கள். ஜல்லிகட்டு போட்டியை காணவந்த பொதுமக்கள் இதனை கண்டு மெய் சிலிர்த்து கைத்தட்டி, விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
காளைகளை பிடிக்கும் போது காயம் பட்ட வீரர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறப்பாக களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், எதற்கும் அஞ்சாமல் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
- பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.
கூடலூர்:
தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.
பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
- உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் நேற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி மற்றும் கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
- நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, பிரன்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மெல்போர்ன்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி 37 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீரர் டாமஸ் மசாக் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாயோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), செபாஸ்டியன் பயஸ் (அர்ஜென்டினா), கரன் கச்சனோவ் (ரஷியா), தாமஸ் மார்ட்டின் எட்ச்வெர்ரி (அர்ஜென்டினா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 0-6, 2-6 என்ற நேர்செட்டில் 16 வயது ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதேபோல் முன்னாள் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட வீராங்கனையான மரியா டிமோபீவாவிடமும் (ரஷியா), 8-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் எலினா அவனிஷியானிடமும் வீழ்ந்தனர்.
மற்ற ஆட்டங்களில் ஹாடட் மையா (பிரேசில்), ஸ்டாம் ஹூன்டெர் (ஆஸ்திரேலியா), அலிசியா பார்க்ஸ் (அமெரிக்கா), பார்பரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), லிசி சுரென்கோ (உக்ரைன்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), டியானி பேரி (பிரான்ஸ்), அனஸ்டாசியா ஜகாரோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.
- 2 முறை தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 17-ந் தேதி நடக்க வேண்டிய மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.
- நீங்கள் அத்தனை பேரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகளை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மலர் தூவி வணங்கிவிட்டு சிம்சன் சந்திப்பு பெரியார் சிலைக்கு வந்து வணங்கினார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்டச் செயலாளர் சிற்றரசு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் உள் ளிட்ட அனைத்து துணைச் செயலாளர்களும் நிர்வாகிகளும் உடன் வந்தனர்.
பெரியார் சிலையில் பிரகாசமாக தீப சுடர் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த தீப சுடரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்து கூடியிருந்த நிர்வாகிகள் மத்தியில் காண்பித்தபடியே துணைச் செயலாளர் ஜோயலிடம் வழங்கினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீர வணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து துவங்கி வைத்துள்ளோம். இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு கிட்டத்தட்ட 310 கி.மீ.அளவுக்கு சேலத்திற்கு சுடரை கொண்டு செல்கின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று உள்ள மாவட்டக் கழக செயலாளர்கள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிற்றரசு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் அத்தனை பேருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இளைஞரணியினர் அத்தனை பேருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2 முறை தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 17-ந் தேதி நடக்க வேண்டிய மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது. இது மிகப்பெரிய முக்கியமான மாநாடு.
இளைஞரணிக்கு தலைவர் கொடுத்திருக்க கூடிய மிகப்பெரிய ஒரு சவால். இந்த சவாலை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும். எந்த ஒரு இயக்கமும் தேர்தல் வருவதற்கு முன்பு மாநாடு நடத்துவார்கள். அதை தாய் கழகம்தான் நடத்தும். இந்த முறை ஒரு அணிக்கு, அதுவும் குறிப்பிட்டு சொல்கிறேன்.
இளைஞர் அணிக்கு அந்த வாய்ப்பை தலைவர் தந்துள்ளார். அந்தளவுக்கு நம்முடைய அணியின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை எனக்கு உங்கள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை.
நான் இளைஞரணி செயலாளராக 2019-ம் ஆண்டு பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தலைவர் உத்தரவிட்டார். அதை செய்து முடித்தோம்.
அதே போல் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம். அதன் பிறகு 4 லட்சம பேர்களுக்கு நிர்வாகிகள் பணிகளை கொடுத்தோம். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேர்காணல் செய்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தோம்.
மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகிய நீங்கள் செய்துள்ள பணிகளை வைத்து அந்த வேலையையும் செய்து முடித்தோம். அதே போல் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி முடித்தோம்.
இப்போது இல்லம் தோறும் இளைஞரணி நிகழ்ச்சி நடத்தி வீடு வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தோம். எல்லாவற்றையும் விட மிக முக்கிய பணியாக 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. தலைவர் இந்த பொறுப்பை நம்மிடம் கொடுத்துள்ளார். இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம்.
இந்த மாநாட்டுக்கு பெயரே, மாநில உரிமைகள் மீட்பு மாநாடு கடந்த 9 வருடமாக நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையும் இழந்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளோம்.
கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் இழந்து உள்ளோம். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிற ஒரு மிகப்பெரிய வெற்றி மாநாடாக நம்முடைய சேலம் மாநாடு அமைய போகிறது.
நம்முடைய சேலம் மாநாட்டை இதுவரை இந்திய வரலாற்றில் இப்படி ஒரு சிறப்பான எழுச்சியான மாநாடு நடந்ததில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தி காட்டுவோம்.
நீங்கள் அத்தனை பேரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும். இந்த சுடரை அடுத்த 2 நாட்களுக்குள் இளைஞர் அணி தோழர்கள் சேலத்திற்கு எடுத்து வர உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் பாதுகாப்பாக வர வேண்டும். 21-ந் தேதி சேலத்தில் சந்திப்போம். 20-ந் தேதியே பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 20-ந் தேதி மாலை முதல்-அமைச்சர் நமது மாநாட்டு திடலுக்கு வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் இளைஞரணி மாநாட்டை விளக்கி சொல்வதற்காக 500 மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. அவர்கள் அத்தனை பேரையும் முதல்-அமைச்சர் சந்திக்க உள்ளார்.
20-ந் தேதி மாலை ஆரம்பிக்கின்ற மாநாடு 21-ந் தேதி காலை 8.30 மணியளவில் மாநாடு துவங்க உள்ளது. கழக துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி எம்.பி. தான் மாநாட்டு பந்தலில் முகப்பில் கறுப்பு-சிவப்பு கொடியை ஏற்ற இருக்கிறார். அதன் பிறகு மாநாடு துவங்குகிறது.
அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. கழக பேச்சாளர்கள் 21 பேர் பேச உள்ளனர். இளைஞரணி புகைப்பட கண்காட்சி துவங்கப்பட உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். 2024 தேர்தலில் எப்படி இளைஞரணி மிக மிக முக்கியமாக இருந்ததோ அதே போல் இப்போதும் இருக்கும் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கும் இளைஞரணி தான் முன்களத்தில் நின்று பாடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
- 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாபெரும் தலைவரான எம்.ஜி.ஆருக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது நல்ல விஷயம்தானே. அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது அல்ல, எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டாரே...
ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் பெருமையே வீரமும், காதலும்தான். வீரத்தின் சின்னம் ஜல்லிக்கட்டு.
அண்ணாமலையை முதலமைச்சராக்க ரஜினிகாந்த் விருப்பப்பட்டதாக துக்ளக் குருமூர்த்தி கூறியிருக்கிறாரே.... இதற்கான பதிலை ரஜினிகாந்த்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாத சூழலில், அவர் சொன்னதாக குருமூர்த்திதான் இதனை கூறியுள்ளார். ரஜினி சொல்லட்டும், அதன்பிறகு நான் சொல்கிறேன். அறையில் நடந்ததை அம்பலத்தில் சொல்லட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். எது எப்படி இருந்தாலும், அது இலவு காத்த கிளி, அது நடக்காத விஷயம். 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். அது அவர்களது ஆசை. ஆனால் இரட்டை இலை பெரியளவில் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கிறது. அதுகிட்ட எதுவுமே எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
- பிரதமர் வருகையின் எதிரொலியாக திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
திருச்சி:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடுகள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

அதன்பின், நாளை மறுதினம் காலை பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் செல்கிறார். கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்து ராமேசுவரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். அன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
மறுநாள் (21-ம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன்பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகை எதிரொலியாக திருச்சியில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- 5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
- மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது.
இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் படையெடுத்தனர்.
5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.
கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டாலும், சூழலுக்கு ஏற்ப வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இல்லை எனவும் கூறப்படுகிறது.
- ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும்.
- தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.
ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது
உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






