search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
    X

    வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்

    • ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.முத்துராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிகட்டு போட்டியினை ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய 3 கிராமத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்துவர்.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் அரசிடம் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளை அடக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான பெயர் பதிவும் தொடங்கி நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காளை பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் ஜல்லிகட்டு காளைகளுக்கு கற்பூரம் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்ட 250 காளையர்கள் களத்தில் காளைகளை அடக்க களமாடினார்கள். ஜல்லிகட்டு போட்டியை காணவந்த பொதுமக்கள் இதனை கண்டு மெய் சிலிர்த்து கைத்தட்டி, விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    காளைகளை பிடிக்கும் போது காயம் பட்ட வீரர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறப்பாக களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், எதற்கும் அஞ்சாமல் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×