என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
    • பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    வருகிற 19 மற்றும் 21-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (19-ந்தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஏ.இ.கோவில் சந்திப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடந்தது.

    அதில் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் 'கேலோ' இந்திய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முழு அளவிலான போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • அசம்பாவி தங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
    • நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லகுடப்பட்டி ஊராட்சி நாகர்குட்டை பகுதியில் மலை அடி வாரத்தில் பிரசித்தி பெற்ற நாகதேவதை கோவில் உள்ளது. இங்கு மூலவராக நாக தேவதை சிலை அமைந்துள்ளது.

    சிலையின் அடிப்பகுதியில் பாம்பு வடிவிலான உருவம் உள்ளது. இது இயற்கையாக உருவாகிய அமைப்பு ஆகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் காணும் பொங்கல் அன்று நாகதேவதைக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த பகுதியை சுற்றி மலைகள், மலைக்குட்டைகள் உள்ளன. புதர்கள் அதிக அளவில் மண்டி உள்ளதால் அடிக்கடி விஷ பாம்புகள் ஊருக்குள் வந்து விடும்.

    ஆகையால் ஊருக்குள் பாம்புகள் வராமல் இருக்க இந்த பகுதி மக்கள் ஆண்டு தோறும் நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

    அதேபோல் நேற்று காலை முதலே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து கூட்டம் கூட்டமாக வந்து நாகதேவதையை வணங்கினார்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து மாலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வந்தது. அப்போது கூடி இருந்த பக்தர்களும், விவசாயிகளும் தாங்கள் கொண்டு வந்த ஆமணக்கு விதைகள், உப்பு, மிளகு உள்ளிட்ட தானியங்களை வாரி இறைத்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் பெங்களூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பாரூர் அரசம்பட்டி, தருமபுரி, திருப்பத்தூர், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அசம்பாவி தங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் வழங்க திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பினர் வழங்கி வருகிறார்கள்.
    • மீதம் உள்ள 10 லட்சம் வீடுகளுக்கும் வருகிற 20-ந் தேதிக்குள் வழங்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் வழங்க திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பினர் வழங்கி வருகிறார்கள்.

    ஒவ்வொரு வீட்டுக்கும் ராமர் படம், அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள். கடந்த 15-ந் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை 90 லட்சம் வீடுகளுக்கு மட்டும் வழங்கி உள்ளார்கள்.

    எனவே மீதம் உள்ள 10 லட்சம் வீடுகளுக்கும் வருகிற 20-ந் தேதிக்குள் வழங்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஊர்வலம் போல் செல்லுதல், வாத்தியங்கள் முழங்க செல்லுதல், ஆஞ்சநேயர் வேடத்துடன் செல்வது என்று விதவிதமாக செல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    சென்னை :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது.

    இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலைபேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும்.

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.
    • கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாசிச இருளகற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

    இந்த சுடர், சென்னை-காஞ்சிபுரம்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன் பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

    சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ந் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளேன்.

    கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்-பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
    • முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி:

    தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.

    அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.


    இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.

    இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    • நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
    • இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கிராமங்களை விட அதிகளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

    இந்தியாவில் நகர் புறங்களில் வாழக்கூடியவர்கள் இனிப்புகள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    சராசரியாக, ஒரு சாதாரண நகர்ப்புற இந்தியர் குறைந்தபட்சம் 100 கிராம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறார், இது ஒரு நாளைக்கு 500 கிலோ கலோரிகளை வழங்குகிறது.

    இது தேவையானதை விட அதிகம் என்று ஐதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதிக ஆற்றல் கொண்ட உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாததன் விளைவாக, நகரங்களில் உள்ள மக்கள் அதிக எடை மற்றும் பருமனாக உள்ளனர்.

    "நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.


    இது சமீபத்திய தரவுகளில் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 50 கிலோகலோரி என்பது ஒரு மாதத்தில் எடை 1 கிலோ வரை அதிகரிக்க்கும்.

    "பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதி சுவையான தன்மை, அதிகமாக உட்கொள்வதை எளிதாக்குகிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நீரழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான தொற்று அல்லாத நோய்கள் அதிகரிக்கும்.

    உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இந்தியர்களிடையே இளம் வயதிலேயே வெளிப்படுகின்றன, இறப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளது.

    இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் இந்திய நகர்புற மக்களை நோய்வாய் படுதலில் இருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
    • 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை" என்றார்.

    • நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார்.
    • ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.

    திருச்சி:

    கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார்.

    பின்னர் சென்னையில் நாளை மாலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று இரவு தங்குகிறார்.

    அதன் பின்னர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 10:20 மணிக்கு வந்தடைகிறார்.

    அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலை 10:45 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார்.

    பின்னர் பிரதமர் மூலவர் ரங்கநாதரை தரிசிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அங்குள்ள அர்ச்சுன மண்டபத்திலிருந்து தங்க விமானத்தை பார்வையிடுகிறார். முன்னதாக ரங்கா ரங்கா கோபுர வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் பேட்டரி கார் மூலம் பிரதமர் தாயார் சன்னதி செல்கிறார். மேலும் நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார். தொடர்ந்து கம்ப ராமாயணம் அரங்கேறிய மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றி போலீசார் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களின் விபரம், அவர்களுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.

    புதிதாக தங்கள் வீடுகளுக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் நேற்று முதல் வருகிற 20-ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி திருச்சி வருகைய ஒட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. லவ் குமார் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமிஷனர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கு இடையே இன்று காலை ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள பஞ்சகரை பகுதியில் ஹெலி காப்டர் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு முதல் மண்டி கிடந்த பகுதிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக சமன் செய்யப்பட்டது.

    பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×