என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி சாமி தரிசனம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டம்
- நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார்.
- ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.
திருச்சி:
கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார்.
பின்னர் சென்னையில் நாளை மாலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று இரவு தங்குகிறார்.
அதன் பின்னர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 10:20 மணிக்கு வந்தடைகிறார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலை 10:45 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார்.
பின்னர் பிரதமர் மூலவர் ரங்கநாதரை தரிசிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அங்குள்ள அர்ச்சுன மண்டபத்திலிருந்து தங்க விமானத்தை பார்வையிடுகிறார். முன்னதாக ரங்கா ரங்கா கோபுர வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் பேட்டரி கார் மூலம் பிரதமர் தாயார் சன்னதி செல்கிறார். மேலும் நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார். தொடர்ந்து கம்ப ராமாயணம் அரங்கேறிய மண்டபத்தை பார்வையிடுகிறார்.
ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றி போலீசார் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களின் விபரம், அவர்களுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.
புதிதாக தங்கள் வீடுகளுக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் நேற்று முதல் வருகிற 20-ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி திருச்சி வருகைய ஒட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. லவ் குமார் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமிஷனர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு இடையே இன்று காலை ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள பஞ்சகரை பகுதியில் ஹெலி காப்டர் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு முதல் மண்டி கிடந்த பகுதிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக சமன் செய்யப்பட்டது.
பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.






