என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரிப்பட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அழுத்த சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர்கள் பெரியதச்சூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    20-ந்தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் தை கார்த்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    தைகிருத்திகை பெருவிழா செங்கல்பட்டு மாவட் டம், திருப்போரூர், கந்த சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நாளை மாலை முதல் 20-ந் தேதி இரவு வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படுவதோடு தைகிருத்திகை தினமான வருகிற 20-ந் தேதியன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்கள் சார்பில் மார்ச் 8-ந் தேதி அன்று மகா சிவராத்திரி பெருவிழாவினை விமரிசையாகவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்திட வேண்டும்.

    அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்க உள்ளது.

    இந்தாண்டிற்கான ராமேசுவரம் காசி ஆன்மிக பயணத்தில் 300 பக்தர்கள் 5 கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    முதற்கட்ட பயணம் பிப்ரவரி 1-ந் தேதி புறப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள், காசியில் பக்தர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்களுக்கு உதவியாக செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர் குழு, மருத்துவக் குழு நியமனம் செய்து பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையிலும், பக்தர்களுக்கு பயனுள்ள வகையிலும் அமைந்திட துறை அலுவலர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சியின் 2-வது வார்டில் ராமலெட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, பா.ஜனதா-4, சுயேட்சை-2, காங்கிரஸ்-1 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில் ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நகராட்சி கூட்டங்களின்போது அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி தலைவி ராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் வழங்கினர்.

    அந்த வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நகராட்சி பொறுப்பு கமிஷனரான கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் சுகந்தியிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர், நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று (18-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு கமிஷனர் (பொறுப்பு) சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் தொடங்கியது.

    இதில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால் போதிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சுகந்தி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ராமலெட்சுமியின் நகராட்சி தலைவர் பதவி தப்பியது.

    • பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
    • ​பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.

    இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 50 சதவீத வாகனநிறுத்தம் பகுதி வருகிற 20-ந்தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.

    பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.

    • ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், பழனி வழியாக பாலக்காடு வரை தினந்தோறும் 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயிலும், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒட்டன்சத்திரம், பழனி வழியாக செல்கிறது.

    இன்று காலை பாலக்காட்டில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. பழனி ரெயில் நிலையத்தை கடந்து ஒட்டன்சத்திரம் நோக்கி காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் உடைப்பு இருந்தது என்ஜின் டிரைவருக்கு தெரியவந்தது.

    ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்குமாறு டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயிலை இயக்கி அந்த இடத்தில் இருந்து கடந்து சென்றது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 500 பயணிகள் உயிர் தப்பினர்.

    இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும். எனவே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம் ரெயில்வே பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அமைச்சர் சிவசங்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தியதில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை எதிர்நோக்கும் வகையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன்.

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைக்கும் முதலமைச்சர் நேரில் பேசுவது என்பது சிரமம் ஆகும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளனர்.

    ஏற்கனவே தற்போது உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போராட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையான ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையானது ஒரு துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கையாக இல்லாமல் பல்வேறு துறை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளதால் அரசின் நிதி சுமை எவ்வளவு கூடுதலாகும் என்பதை கணக்கிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக முடிவெடுத்தால் மற்ற துறை சார்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பாகும் என்ற காரணத்தினால் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது வேலையில் இருந்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருவதால் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 4 கோரிக்கைகளில் தற்போது 2 கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் நிதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அரசியல் காரணத்தினால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் அகவிலைப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது நிதி நிலை சரியான பிறகு அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கலைஞர் உரிமை திட்டம் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பாக கூறியபடி நிதி நிலைமையை சரி செய்து தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்களில் அதிகளவில் பயணம் செய்து வந்தனர்.

    இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டதை விட அதிக அளவில் பயணிகள் சென்று வந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கண்டக்டர்கள், டிரைவர்கள் பயணிகளை பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு அழைத்துச் சென்று வந்தனர். சென்னை நோக்கி வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் காரணத்தினால் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்னும் 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகம் பஸ்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கிளாம்பக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

    மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தொ.மு.ச. பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஒகேனக்கல் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக் கலில் காணும் பொங்கல் விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 15ஆம் தேதி வாசல் பொங்கலும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தொங்கு பாலம் நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. முதலைப் பண் ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற் றது. உணவகங்கள், மீன் வறுவல் கடை, மீன் மார்க் கெட் உள்ளிட்ட பகுதியில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.


    மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் திட்டு, ஆலம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

    மேலும் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் அவர், ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

    சென்னையில் நாளை மாலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார்.
    • வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

    அரங்கூர்:

    கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

    கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார். மேலும் வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

    இந்நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபிகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.
    • தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ரோ சிட்டா திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7.20 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இதில் சுவாமி பத்மேந்திரா கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இதைத் தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடக்கி றது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வாகன பவனியும், சமய சொற்பொழிவும், சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடக்கிறது.

    9-ம் திருவிழா நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கி றது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி திருக்கோவி லுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.

    ×