என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
    • இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    இளைஞரணியின் எழுச்சி மிகுந்த 2-வது மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. சேலத்திற்கு வர நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?...

    இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.

    இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.

    எனது உடன்பிறப்புகளே!

    கழக உடன்பிறப்புகளே!

    கலைஞரின் உடன்பிறப்புகள்!

    சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்! என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான்.
    • மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15ரூபாயில் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப் பட்டது. ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துவிட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 13 மடங்கு அளவுக்கு அதிகரித்தது.

    இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1029 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம் ஆகும்.

    பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 13 மடங்கு உயர்த்திவிட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?

    தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாட்டு மக்களால் இன்னும் மீள முடியவில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.

    முன்பு வழங்கப்பட்டதைப்போல பொதுப்பயன் பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.
    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2018-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது.

    கடைசியாக 2022-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

    18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் இந்தப்போட்டி நடைபெற உள்ளது.

    ஸ்குவாஷ் போட்டி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ளது.

    சென்னையில் நேரு ஸ்டேடியம், நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலைக்கழக மைதானம், நேரு பார்க், மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ரேஞ்ச், எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ், நீச்சல் ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் 20 விளையாட்டுகள் நடக்கிறது. கோகோ, கூடைப்பந்து உள்ளிட்ட 6 விளையாட்டுகள் திருச்சி, மதுரை, கோவையில் உள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) முழு வீச்சில் செய்து வருகிறது. தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    தொடக்க விழா நிகழ்ச்சிகள் 1½ மணி நேரம் வரை நடைபெறும். கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

    • ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி நாளை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக கவர்னர், முதலமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும்.

    * அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

    * பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.

    * வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

    * ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு, ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.

    எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தல்லாகுளம் பெருமாள் கோவில், கோரிப்பாளையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதேபோல் பெரியார் பேருந்து நிலையம், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறு பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிர சோதனை இன்று முதல் ஜனவரி 26-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் மோடி முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி வருகிற 20-ந் தேதி ஸ்ரீரங்கத்திலும், மறுநாள் ராமேசுவரம் கோவிலிலும் பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

    இதையொட்டி ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹெலிகாப்டரிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 12 பேரை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி நாளை (19-ந் தேதி) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என பாம்பன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.

    அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.

    ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர்.
    • பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருப்பூர்:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
    • பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

    21-ந் தேதி அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி. தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாநாட்டு முகப்பு பகுதியில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்று பேசுகிறார். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

    அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவர் உரையை நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, பொது செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பேசுகிறார்கள். இறுதியாக 7.30 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் நிறைவு பேருரை மற்றும் சிறப்புரை ஆற்றுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவு பகுதியில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது. பந்தல் அலங்காரமும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்டமான புல்லட் பேரணி 20-ந் தேதி மாலையில் நடைபெறுகிறது. மாநாட்டு திடலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புறப்படும் இந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

    அப்போது டிரோன்கள் மூலமாக மாநாட்டு விளக்க காட்சியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 20-ந் தேதி பிற்பகலில் சேலம் வருகிறார்கள். ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொண்டலாம்பட்டியில் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோன்று மேட்டு பட்டியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல் வரையில் 20 அடி தூரத்துக்கு ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வழிநெடுக தி.மு.க. கொடிகளும் பறக்க விடப்பட்டு உள்ளன.

    மாநில உரிமை மீட்பு முழக்கம் என்கிற பெயரில் நடத்தப்படும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவர்கள் நாளை மறுநாள் 20-ந் தேதி அன்றே சேலத்தில் குவிய உள்ளனர். இப்படி வெளியூர்களில் இருந்து வரும் தி.மு.க. தொண்டர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.

    மாநாட்டில் மொழி போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா, தனுஷ் ஆகியோரது பெயர்களில் தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    முடிவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி தி.மு.க.வினர் சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பு பேனர்களை வைத்து, தி.மு.க. கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர். இதனால் சேலம் தி.மு.க. மாநாடு 2 நாட்களுக்கு முன்பே களை கட்டி உள்ளது.

    மாநாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி. பவா னீஸ்வரி, சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோரின் மேற்பார்வையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
    • மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன்-அழகுகோமதி தம்பதியின் 2-வது மகள் ஸ்ரீநிதா (வயது13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது 4 வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார்.

    ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார்.

    ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் 'மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    இதுகுறித்து ஸ்ரீநிதா கூறுகையில், நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார்.

    • கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே!
    • கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லாருக்கும் எல்லாம்' என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி - சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அவற்றைத் தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு. தரமாகவும் அழகாகவும் வேட்டி - சேலைகள் இருப்பதைப் பொங்கல் நாளில் அதனை உடுத்தியிருந்தது தொடர்பான பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் கண்டேன்; நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று!

    அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா. அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை - சாதிய வன்மத்தை - மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'சமத்துவப் பொங்கல்' விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

    உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. தலைநகரான சென்னை மாநகரம் தொடங்கி, ஊராட்சிகள் வரை சமத்துவப் பொங்கலின் மணம் வீசியது. இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.


    கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே! 1980-ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது.

    கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

    பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

    கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

    சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிச்சாங் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் - மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு - பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.


    இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.

    இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972-ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி - ஓடி, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.

    நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.

    மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.

    தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×