என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை.
    • இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றார் நயன்தாரா.

    சென்னை:

    நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

    இதற்கிடையே, இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.


    இந்நிலையில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜெய் ஸ்ரீ ராம்... இந்தக் குறிப்பை கனத்த இதயத்துடனும், அன்னபூர்ணி திரைப்படம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன். அன்னபூரணியை உருவாக்குவது ஒரு சினிமா முயற்சி மட்டுமல்ல, நெகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சியாகும்.

    இது வாழ்க்கையின் பயணத்தை பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டது. அங்கு தடைகளை சுத்த மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான செய்தியைப் பகிர்வதற்கான எங்கள் நேர்மையான முயற்சியில், நாம் கவனக்குறைவாக காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.


    முன்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன்.

    அன்னபூரணியின் பின்னால் உள்ள நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் ஆகும். துன்பத்தை ஏற்படுத்துவது அல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எனது பயணம் நேர்மறையைப் பரப்புவதற்கும், ஒருவருக்கொருவர் கற்றலை வளர்ப்பதற்கும் ஒரு ஒற்றை நோக்கத்துடன் வழிநடத்தப்படுகிறது. மனமார்ந்த வணக்கங்களுடன்... நயன்தாரா" என பதிவிட்டுள்ளார்.

    • ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்து.
    • விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டது.

    அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
    • அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.

    சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.

    2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

    கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

    அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!

    அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து.
    • போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்ப்பு.

    சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விபத்தில், யாருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • சி.வி.சண்முகம் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
    • இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

    இதில், 12 மணி நேர வேலை நேரம் குறித்த அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, மது விற்பனை தொடர்பான போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டன.

    அரசு, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, 4 வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

    • கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர்.
    • 2017-ம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா அங்கு செல்லாமலேயே இருந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக சசிகலா இன்று மாலை கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார்.

    எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதாவின் சிலையை வைக்க நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க உள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

    கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர். 2017-ம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா அங்கு செல்லாமலேயே இருந்தார்.

    7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு இன்று மாலை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
    • 35 பேர் கொண்ட தேர்தல் குழுவின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை :

    இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.


    35 பேர் கொண்ட தேர்தல் குழுவின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் குழுவில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரிஅனந்தன், மணிசங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • வடகலை, தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

    மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.

    வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.
    • நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

    இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை வாதமும், மதவாதமும் அதிகரித்துவிட்டது. பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று அதன் அஜன்டாவை நிறைவேற்றி வருகிறது. தேசிய கல்வி கொள்கை, அயோத்தியில் ராமர் கோவில், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என்று பலவற்றை செய்து உள்ளது. இந்திய அரசியலமைப்பை மாற்றும் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்டு உள்ளது.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

    அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில், சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி கவர்னர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கி ராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட, பிப்ரவரி 29-ந்தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடை முறையில் உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ். அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்களோ பறக்கவிட, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில், ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். ரெயில் பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு ஐ.ஜி. லவ்குமார் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலைய பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய வளாகம் மற்றும் பழைய விமான நிலையப் பகுதிகள் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பழைய விமான நிலையை வளாகத்தில் உள்ள சரக்கு பிரிவு, கூரியர் பிரிவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலைய வளாகத்தி குள், ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் வருவதற்கு அனுமதி இல்லை.

    நிரந்தர பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டை களை வெளியில் தெரியும்படி தொங்கவிட்டு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. விமான நிலையத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்பு இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் தொடங்கி ஐ.என்.எஸ். அடையாறு, நேரு விளையாட்டு அரங்கம், கிண்டி கவர்னர் மாளிகை வரை நடக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை, பிரதமர் மோடி சென்னையில் இருந்து, திருச்சி புறப்பட்டு செல்லும், 20-ந்தேதி வரை, அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×