search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி வருகை எதிரொலி: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை
    X

    பிரதமர் மோடி வருகை எதிரொலி: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை

    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • பிரதமர் வருகையின் எதிரொலியாக திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

    திருச்சி:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

    நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

    இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடுகள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.


    அதன்பின், நாளை மறுதினம் காலை பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் செல்கிறார். கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.

    அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்து ராமேசுவரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். அன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.

    மறுநாள் (21-ம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன்பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகை எதிரொலியாக திருச்சியில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×