என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது.
    • யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
    • ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    பொன்னேரி:

    நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
    • மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சி.எம்.ஆர்.ஆர். நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

    இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை. கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).

    அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி).

    வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு. ஜி.என்.செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.

    மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.
    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இதில் அரூர், மொரப்பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்புக் காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

    மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதியில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங்குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்குகள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

    இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

    இதனால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டியில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
    • 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.


    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று  நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.

    இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    • வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு.
    • திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.

    சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.

    நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.

    அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.

    தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

    மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.

    இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
    • மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.


    கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.


    தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.

    மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேவ்தத் படிக்கல் சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவிப்பு.
    • தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜெகதீசன் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார்.

    தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் இடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் (151 ரன்) அடித்தார். அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இது கர்நாடகா அணியின் ஸ்கோரை விட 215 ரன் குறைவாகும்.

    தமிழக அணியில் பாபா அபரஜித் அதிகபட்சமாக 48 ரன்னும், என்.ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், சசிகுமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    215 ரன்கள் முன்னிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

    • கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் முடிச்சூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு பஸ்களை நிறுத்தும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இதனை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதே போல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-


    மண்ணிவாக்கத்தில் ஆம்னி பஸ் நிறுத்த வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 300 பேர் தங்கும் இடம், உணவகம், கழிப்பிட வசதியுடன் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமான பணி நடக்கிறது. மேலும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

    கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணியில் தாமதம் ஆனது. ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ்நிலையம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்பட கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய், வதந்தி பரப்புகிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயங்கிய 100 சதவீத பஸ்களில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீதம் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று நள்ளிரவு பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் இரவு 11.30 மணிக்கு மேல் எப்போதும் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்.


    நள்ளிரவு நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பாதுகாப்புக்காக பஸ் பயணம் செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் 200 பேர் திடீரென நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று உள்ளனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    • விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய த்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட ப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா, 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் தொடக்க விழா மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மகளிர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு த்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திக்கேய சிவ சேனாதிபதி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து 2 முறை உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தந்துள்ளது தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் மாநகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் நிகழ்ச்சிகள் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    • போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் செபஸ்தியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு திருப்பலிக்கு பின் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ×