என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
- ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் நேற்று இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு - அம்பாத்துரை இடையே வந்து கொண்டு இருந்தபோது காமலாபுரம் பிரிவு அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறையும், அதன் அருகே சிறு சிறு கற்களும் இருந்தது.
இதனை ரெயில் ஓட்டுனர் கவனித்து விட்டதால் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் உதவியாளர்களோடு கீழே இறங்கி தண்டவாளத்தை சோதனை செய்தனர்.
முன்பாகவே ரெயில் ஏறியதில் ஒரு சில பாறாங்கல் உடைந்து சத்தம் கேட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சுனில்குமார், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தினர்.
பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 9-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இதே பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீதும் கல் வீசி தாக்குதல் நடைபெற்றது.
கொடைரோடு அருகே தொடர்ந்து இதே போன்று கல் வீச்சு மற்றும் தண்டவாளத்தில் பாறைகள் வைக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது நடந்த சம்பவம் ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் 2-வது ஏவதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது.
- மாணவர்கள், ஆர்வலர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வசதியாக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட்டுகள், செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் 2-வது ஏவதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது. இந்தநிலையில், மாணவர்கள், ஆர்வலர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வசதியாக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் வந்து பார்வையிட ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அந்தவகையில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வானிலை செயற்கைக்கோளான 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்.14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதனை நேரில் பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
- கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
- கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்புமரியாதை வழங்கப்படுகிறது.
கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். கவர்னரின் செயலாளர் குமார் ஜெயந்தும் உடன் வருகிறார். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
சரியாக, காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்குகிறது. காலை 10.02 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குவார். சுமார் 40 நிமிடங்கள் அவரது உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, கவர்னர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அந்த வகையில், இன்றைய கவர்னர் உரையிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், அவரது ஆங்கில உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிக்க இருக்கிறார். அவர் பேசி முடித்ததும் இன்றைய கூட்டம் முடிவடையும். தொடர்ந்து, சபாநாயகர் அறையில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.
அந்த கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது?, முதலமைச்சரின் பதில் உரை இடம் பெறும் தினம் ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். தனது உரையில் பல பகுதிகளை அவர் தவிர்த்து பேசினார் என்று சர்ச்சை எழுந்தது. சற்று நேரத்தில் அவையில் இருந்து அவர் வெளியேறவும் செய்தார். அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த முறையும் அதுபோல் பரபரப்பு சம்பவம் எதுவும் நடந்துவிடுமோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால், அவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
இந்த விவாதம் 23-ந்தேதி வரை நடக்க வாய்ப்பு இருக்கிறது. நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார்.
அத்துடன், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும். பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதமும் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.
- பிரதமர் மோடியின் நினைவில் தமிழகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
- எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (பிப்ரவரி 11) மாலை சென்னை வந்திருந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமருக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழகம், பிரதமர் மோடியின் நினைவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது."
"பிரதமர் எங்கு சென்றாலும், தமிழை குறித்தும் தமிழ் மக்களை குறித்தும் பேசுகிறார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு பத்ம விருது அறிவித்து கௌரவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியின் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகில் எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.
- சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
- முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இருக்கிறார்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்துள்ள ஜே.பி. நட்டாவை பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

சென்னை வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ட்ரல் அருகே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வத்தையும் ஜே.பி. நட்டா சந்திக்க இருக்கிறார். இந்த பயணத்தின் போதே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வியூகம் பற்றிய ஆலோசனை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
- மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
- பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.
சேலம்:
சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.
இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.
மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.
மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.
ஒகேனக்கல்:
கோடை காலத்திற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்துள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் பென்னாகரம் பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இடம்பெயர்ந்துள்ள யானைகள் பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை உடைத்தும், தண்ணீருக்காக கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் சிறிய தொட்டிகளில் தண்ணீர் குடிக்க பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலைக்கு பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் வந்து செல்கிறது.
அப்போது இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், யானையைக் கண்டதும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்துவது, வாகன ஒலி, ஒளி எழுப்புவது போன்ற செயல்களின் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
ஒகேனக்கல் வனப்பகு தியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினரின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகளை வாகன ஒளியில் யானைகள் மிரண்டு உடைத்திருப்பதால் யானைகள் கடக்கும் பகுதிகளை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.
வறட்சி நிலவும் காலங்களில் ஆண்டுதோறும் யானைகள் ஒகேனக்கல் பகுதிக்கு இடம் பெயரும் சூழல் தொடர்ந்து நிகழ்வதால் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்து றையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டும், மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்.
- தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் அளித்த உறுதி அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. வேளாண் விரோத சட்டம் திரும்ப பெறப்பட்டது.
இதே போல் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் இடம் பெறும். குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் 13-ந் தேதி டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதற்காக சென்று கொண்டுள்ளனர். நேற்று விவசாயிகளின் போராட்ட குழு ஹரியானா மாநில எல்லையை அடைந்தது.
இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பஞ்சாபில் விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாளை ( திங்கள் கிழமை ) மாலை 3 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக் தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் பங்கேற்கிறேன். இதற்காக நான் தஞ்சையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று அங்கிருந்து சண்டிகருக்கு செல்கிறேன். அங்கு மத்திய அமைச்சர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறேன்.
இதில் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு புறம் இருக்க போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இருந்தாலும் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
- டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை பாசனத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு மாலை 6 மணியுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று 66.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 66.21 அடியாக சரிந்தது. அணையில் 29.53 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
- பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை என ஏற்கனவே 25.06.2023-ல் தெரிவித்துவிட்டோம்.
- எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* பா.ஜனதாவுடன் இவர்கள் (அதிமுக) மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.
* பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே 25.09.2023-ல் தலைமைக் கழகத்தில் இருந்து தெரிவித்துவிட்டோம்.
* ஆனால் அதன்பின் ஐந்து மாதங்களாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
* உறுதியாக சொல்கிறோம்... இறுதியாக சொல்கிறோம். அதிமுக பா.ஜனதா கூட்டணியில் இல்லை. இல்லை.. இல்லை...
* பத்திரிகையாளர், ஊடகங்களை சேர்ந்தவர்கள் இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்.
* சரியான நேரத்தில் கூட்டணியை அமைப்போம்.
* திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று சொன்னீர்கள். எங்கே முடிந்தது?. அந்த கூட்டணியில் இழுபறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
* 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களை மீண்டும் கொடுக்க மறுக்கின்ற கட்சிதான் திமுக.
* அந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும், இல்லை என்பது 10 நாட்களில் தெரிந்து விடும்.
* திமுகவை பொறுத்தவரை கூட்டணியை நம்பி இருக்கிறது. மக்களை நம்பி இல்லை.
* அதிமுக-வை பொறுத்தவரை மக்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவுதான் இறுதியானது. மக்கள்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் எஜமானர்களாக எண்ணுகின்றோம்.
* வாக்களித்த மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அதற்காகத்தான் அதிமுக.
- திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
- ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறி இருப்பதாவது:-
திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால் பொது மக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பொது மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
- பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.
ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
* நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.

* குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.
* குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.
நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.
மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






