search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
    X

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    • தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
    • டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை பாசனத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு மாலை 6 மணியுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று 66.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 66.21 அடியாக சரிந்தது. அணையில் 29.53 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×