என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள்.
- பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றுள்ளார். வழக்கமாக புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்குவார்கள். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இதுபற்றி செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இப்போதைக்கு மாவட்ட தலைவர்கள் மாற்றம் கிடையாது. பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள். தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும். சிறப்பாக பணியாற்றுபவர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். சரியாக பணியாற்றாதவர்கள் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இது தேர்தல் காலம் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்கள் முழு கவனத்தையும் தேர்தல் களத்தில் காட்டி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் நீடிக்க இதுவும் அளவுகோலாக இருக்கும்.
சமூக வலைதள பிரசார அணியினருடன் நானும், மேலிட பொறுப்பாளர் அஜய்குமாரும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தோம்.
சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகளையும், அதை நிறைவேற்றாததையும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈ.வி.கே. சம்பத்தின் 47-வது நினைவுதினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது படத்துக்கு செல்வப்பெருந்தகை தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், டி.செல்வம், பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஓ.பி.சி.துணை தலைவர் சென்னை ரவி ராஜ், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடம் நடைபெற்று உள்ளது.

ஏற்கனவே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
- தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும் வென்றன.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகையை வழங்கினார்.
கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி, பல்வேறு மாநிலங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:-
37-வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கம் 19, வெள்ளி 26, வெண்கலம் 34 ஆக மொத்தம் 79 பதக்கங்களும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தங்கம் 20, வெள்ளி 8, வெண்கலம் 14, ஆக மொத்தம் 42, 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் 6, வெள்ளி 4, வெண்கலம் 6 ஆக மொத்தம் 16 பதக்கங்களும், தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டு போட்டியில் தங்கம் 17, வெள்ளி 19, வெண்கலம் 12 ஆக மொத்தம் 48 பதக்கங்களும், தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும், பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 1, வெள்ளி 2 ஆக மொத்தம் 3 பதக்கங்களும், ஆசிய சைக்கிளிங் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும், ஆக மொத்தம் 594 பதக்கங்களும் வென்றிருந்தது.
- மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
- திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், நிதித்துறையை போன்று ஐடி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டது.
அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் சபரீசன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே கிளப்பின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.
அதன்படி, நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டார்.
ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
- போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உறுதி மொழி எடுக்கப்பட்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் சேலம், ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 காளைகள் கலந்து கொண்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் 50 பேராக 6 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடு பிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தது. தொட்டுப்பார், நாங்கள் தாறுமாறு என காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.
இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மாடுகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற மாடுகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கினர். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
- மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.
மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போது சென்னையில் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.
எனவே தமிழக தி.மு.க அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி, ஆசிரியர்களின் பொருளாதார நிலைமை, மாணவர்களுக்கு போராட்டமில்லா ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உடனடியாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
- கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மதுரை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக 3,200 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
எனவே, விளைநிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதோடு, சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊட்டி கோர்ட்டில் கொடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தார்.
சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடயங்களை அழிக்கக்கூடாது, மாற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
- பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.
விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.
4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.
ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.






