search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
    X

    "பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்?" - மு.க.ஸ்டாலின் விளக்கம்

    • மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
    • திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:

    அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.

    இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், நிதித்துறையை போன்று ஐடி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டது.

    அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

    கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் சபரீசன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே கிளப்பின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

    அதன்படி, நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டார்.

    ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×