என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார்.
- மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.
கோவை:
தமிழக பா.ஜனதா தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அங்குள்ள கோவிலில் வழிபாடும் நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் அரசு மெத்தனபோக்கு காட்டாமல் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அரசியலை தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு, கேரள அரசுடன் பேசி, தண்ணீரை கொண்டு வர தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டும்.
குளங்களுக்கு நீர் வரும் பாதையை தூர்வாருவதற்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு அதனை சரியான முறையில் கையாளுவது இல்லை.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார். இதற்காக தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதியை ஆளும் அரசு சரியாக பயன்படுத்துவதில்லை.
அதே போல பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், அதில் முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.
எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்த சமயத்தில் அவர்கள், ஆதீனங்கள், குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
- உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
- வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.
ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜே.என்.யு. மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர்.
வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.
Congratulations to the #UnitedLeftPanel on their resounding victory in #JNUSU elections!
— M.K.Stalin (@mkstalin) March 25, 2024
The ABVP's violent tactics, and even cancelling Left candidate @itssinghswati's nomination at the last minute, revealed their fear of defeat. Despite their shameful actions, the #JNU…
- தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது.
- கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான "தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு" எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66 சதவீதம் உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-லிருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500லிருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது. எனவே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாடகை கார் வந்தது.
அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை காரில் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
பணத்தை பறிமுதல் செய்ததும், வாகனத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது.
இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.
இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பணம் வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
- வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர்.
எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்கமாகும். அந்த வகையில் ஜெயலலிதா வழியை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்படி அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களும் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து மனு தாக்கல் செய்தனர்.
இதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று நல்லநாள் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் உள்ள காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தென்சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும், வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ராயபுரம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நாகை, திருப்பூர் தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை கோவையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அக்கட்சியின் வடசென்னை வேட்பாளர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஒவ்வொரு வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்த போது அவர்களுடன் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.
இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்பதால் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர்.
இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது. ஒவ்வொரு வேட்பாளர்களும் மற்ற வேட்பாளர்களை சந்தித்து கொண்டபோது மகிழ்ச்சியுடன் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
- தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
- நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..
விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.
விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர்.
- பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவருவோரிடம் சம்பந்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி பறக்கும்படை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகனத்தணிக்கை சோதனை நடத்தி வாகனங்களில் செல்வோர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணக்கட்டுகளை பறிமுதல் செய்து வருகிறோம்.
இதன் ஒருபகுதியாக ஊட்டி சட்டசபை தொகுதியில் ரூ.4,84,500, கூடலூர் தொகுதியில் ரூ.51,18,400, குன்னூர் தொகுதியில் ரூ.17,98,870 என நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.74,1770 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பவானி சாகர் தொகுதியில் ரூ.49,6238, மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.8,40,800, அவிநாசி தொகுதியில் ரூ.16,36 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 808 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
- மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ராமநாதபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் நிலையம் அருகே ஒரு கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூனை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எம். சரயு பறக்கவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர், அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே, அணி வகுப்பு நிறைவடைந்தது.
இதில், டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மத்திய பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.
- துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
- மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
கம்பம்:
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச மதவாத கட்சியான பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன். மேலும் அ.ம.மு.க. கட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சிந்தித்து செயல்படுங்கள் என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தேனி அ.ம.மு.க. நகர செயலாளர் மணி கூறுகையில், துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியே பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக சலீம் என்பவர் நகர துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
- அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை.
- மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு.
சென்னை :
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக தனது மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் கூறியிருந்தார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் வரும் திங்கட்கிழமை (மார்ச்-25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
அதன்படி, இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 10-ந்தேதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






