என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக தங்கர் பச்சான் கேட்டார்.
    • கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலுார் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சுட்டெரிக்கும் வெயிலுக்கு இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள மரத்தடி நிழலில் ஒதுங்கினார். அந்த மரத்தடியில் கிளி ஜோதிடர் ஒருவர் அமர்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர்பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக கேட்டார்.

    கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு ஜோசியர் கூறினார். கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுத்து, தங்கர் பச்சானை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூண்டுக்கு திரும்பியது. வெற்றி நிச்சயம் என கிளி ஜோதிடர் அடித்து கூற, நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை' என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.

    இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில் ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்னம்பாக்கம் கோவில் அருகே ஜோசியம் பார்த்த 2 கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
    • சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தேகப்படும்படியாக பயணி ஒருவர் கையில் பையுடன் இருந்தார். அவரது கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

    அவர் கொண்டு வந்த ரூ.30 லட்சத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ஞானவேல் (42). ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    • இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.
    • பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 116. 1 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித் தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தூரம் 3-வது வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர், அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசை வாக்கம் வழியாக செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பெரம்பூர் ரெயில் தண்டவாளத்திற்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைகிறது. 4 வழி ரெயில் பாதைக்கு அடியில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    கடந்த வாரம் தண்டவாளத்தை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. அதற்காக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 6 நாட்கள் வேகம் குறைக்கப்பட்டு அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்து சென்றன.

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கல்வராயன் என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயனாவரத்தில் இருந்து பணியை தொடங்கியது. பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூரில் ரெயில் தண்டவாளத்தை சுரங்கம் தோண்டும் எந்திரம் கடக்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மிக குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அனைத்தும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி.
    • கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.

    தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.

    விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது.
    • இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    ராஜபாளைம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக அவர் ராஜபாளையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். பின்னர் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தென்காசி சாலையில் காந்தி கலை மன்றம், பி.எஸ்.கே.பூங்கா, காந்தி சிலை ரவுண்டானா வரை ரோடு-ஷோ நடத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு வந்து பொது மக்களிடையே பேசியதாவது:-

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய மோடி உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் இந்த பகுதியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.


    இந்த தொகுதியில் பிரச்சனைகள் அனைத்து சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. கட்சிக்கும் ஒரே வித்தியாசம் தான். அது, காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    இதற்கு முன்னால் உலக நாடுகள் இந்திய நாட்டின் பேச்சை காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது மோடி ஆட்சியில் உலக நாடுகள் இந்தியா சொல்வதை கேட்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது, தற்போது மோடி ஆட்சியில் 5-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    மேலும் நீங்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்தியாவின் பொருளாதார நிலையை டாப் 3 இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வருவோம். மோடியின் ஆட்சியில் எல்லையில் தாக்கி வந்த எதிரி நாடுகளை ஒடுக்கி இந்தியா பலவீனமான நாடு அல்ல, பலமான நாடு என்று உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். அப்போது உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறும். அதனால் மோடியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.
    • வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை நகரில் கடந்த 2-ம் தேதி சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. சிறுத்தை உலவிய பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டதில் கடந்த 3ம்தேதி சிறுத்தையின் புகைப்படம் பதிவாகி வெளியிடப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 6 தினங்களாக மயிலாடுதுறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்களில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு, பழையகாவேரி ஆறுகளின் கரையோர பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க 7 கூண்டுகள் வைக்கப்பட்டது. எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காவிரி பாலத்தின் கீழ்ப்புறத்தில் சிறுத்தையின் எச்சம் காணப்பட்டது. அதனை சேகரித்து உறுதிபடுத்த வண்டலூர் உயர் தொழில்நுட்ப வன உயிரின மையத்திற்கு வனத்துறையினர் அனுப்பி உள்ளனர்.

    இதனிடையே மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் என்ற ஊரில் சிறுத்தை உலவுவதாக தகவல் கிடைத்தது. சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பாலையூர் பகுதிக்குட்பட்ட காஞ்சிவாய் இடக்கியம் கரூப்பூர் ஆகிய ஊர்களில் நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டதால் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், மயிலாடுதுறை நகர்புற பகுதிகளில் வைக்கப்பட்ட மொத்த கூண்டுகளும் காஞ்சிவாய் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு 16 கூண்டுகள் நீர்வழிப்பாதைகளில் வைக்கப்பட்டுள்ளதாக, 15 குழுக்கள் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் நாகை மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் தோமர் தெரித்தார்.

    இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எல்லை பகுதிகள் அமைந்துள்ளதால் சிறுத்தை அங்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதா என்று கோணங்களில் வனத்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்ற தகவல் பரவி வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
    • கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள்ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை தொடர்ந்து கன்னியாகுமரியில் இன்று காலை "திடீர்"என்று கடல் உள்வாங்கியது. இதனால் கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களுமே நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கன்னியா குமரி யில் கடல் "திடீர்"என்று உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல்போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில்காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


    கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு பா.ஜனதா சார்பாக, இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த இனிய உகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும்.
    • அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.

    இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.

    டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
    • 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்ட பட்டினத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்தறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு, அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு, ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை, கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, லோக்பால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து, வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை விகிதாச்சாரப் பிரதிநிதுத்துவம், தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

    தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம், வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல், 200 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி சட்டம், விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி ஒழிப்பு, வருமான வரி சீரமைப்பு, விவசாயக் கடன் ரத்து , விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு, ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்கப்படும்.

    தனியார்மயமாதலை கைவிடுதல், நீதித்துறையில் இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல், இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல், மாநில சுயாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை , மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், வழக்காடு மொழியாக தமிழ், தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல், தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கோதவரி-காவிரி இணைப்புத் திட்டம், அணுமின் நிலையங்களை மூடுதல், வேலி காத்தான் ஒழிப்பு, இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    பாதுகாப்பு அமைச்சரவையிலும், மேலவைகளிலும் இட ஒதுக்கீடு, ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம், பழங்குடியினருக்கு தனிப்பட்டா, தலித் கிறிஸ்த்தவர்களை பட்டியலில் இணைத்தல், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

    மதுரை:

    தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

    இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

    பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

    முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

    மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

    முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    ×