என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda Mandapam"

    • கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடல் நீர்மட்டம் இன்று திடீரென தாழ்வாக காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும், பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
    • படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக சென்று படகில் பயணம் செய்வதற்கான சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதமும், மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.30 வீதமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் படகு கட்டணத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திடீரென்று உயர்த்தியது. இந்த படகு கட்டண உயர்வு இன்று (5-ந்தேதி) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ..75-ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் அதே ரூ. 300 ஆக நீடிக்கிறது.

    இந்த படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்டணம் உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    • தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.

    இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிய அறிவுறுத்தல்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. இங்கு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும். படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கடந்த 7 மாதங்களாக உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
    • கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று முதல் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய 2 அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது. இதில் 150 இருக்கை வசதிகள் கொண்ட தாமிரபரணி படகில் 75 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும்.

    அதேபோல 150 இருக்கைகள் கொண்ட திருவள்ளுவர் படகில் 19 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும். மீதி உள்ள 131 இருக்கைகள் சாதாரண வசதி கொண்டதாகும். இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரையில் கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி), கேப்டன் தியாகராஜன் (இயக்கம்) ஆகியோர் கன்னியாகுமரி படகு துறையை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக இந்த உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.450 வீதமும் சாதாரண அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கணேசன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன், மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நடராஜன், மாநில துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன், துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
    • 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரிகடல்நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும்திருவள்ளுவர்சிலை அமைந்துஉள்ளவங்ககடல் பகுதிநீர்மட்டம்தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.

    அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்றகடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுத்துறையில் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
    • குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது.

    சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
    • கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள்ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை தொடர்ந்து கன்னியாகுமரியில் இன்று காலை "திடீர்"என்று கடல் உள்வாங்கியது. இதனால் கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களுமே நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கன்னியா குமரி யில் கடல் "திடீர்"என்று உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல்போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில்காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


    கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
    • கடல் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன.

    இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறையில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறையிலும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலத்துக்கான பணிகள் நடைபெற்றன. மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நடுக்கடலில் 6 ராட்சத தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

    விவேகானந்தர் பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கடல் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கடலில் அமைக்கப்பட்டுஉள்ள இந்த ராட்சத தூண்கள் கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலத்தை இணைக்கும் வகையில் 27 அடி உயரத்துக்கு ராட்சத தூண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் இந்த இணைப்பு பாலத்துக்கான கூண்டு ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் வடிவமைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டு மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும்.

    கடல் உப்பு காற்றினால் துருப்பிடிக்காத வகையில் ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் இந்த கூண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. வர்ணம் பூசும் பணியும் முடிந்ததும் இந்த கூண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

    அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கூண்டு பொருத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கூண்டை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு ஆன்றனி, உதவி பொறியாளர்கள் அரவிந்த், ஜோஸ் ஆன்றனி சிறில் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
    • கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக மழையும் காற்றும் அதிகமாக உள்ளது. இதனால் அவ்வப்போது கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதேநேரம் வங்கக்கடல் மட்டும் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கடல் திடீரென உள் வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். அவர்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.

    கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1-ந்தேதி வரை தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்.

    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் கார் மூலம் படகு தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்திற்கு பின்பு 1-ந்தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்பு படகு மூலம் கரை திரும்பும் பிரதமர் மோடி மாலை 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரியில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தரையிறங்கி விட்டு மீண்டும் திருவனந்தபுரத்துக்கு சென்றது.

    கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதையடுத்து நாளை முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு பயணம் செய்வதற்காக தனி படகு புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
    • படகில் இரவு-பகலாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை (30-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு பயணம் செய்வதற்காக தனி படகு புது பொலிவுடன் தயாராகி வருகிறது.

    இந்த படகில் இரவு-பகலாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×