search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை குளிர்சாதன வசதியுடன் உல்லாச படகு சவாரி
    X

    படகு போக்குவரத்தை அமைச்சர் எ.வ.வேலு கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை குளிர்சாதன வசதியுடன் உல்லாச படகு சவாரி

    • கடந்த 7 மாதங்களாக உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
    • கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று முதல் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய 2 அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது. இதில் 150 இருக்கை வசதிகள் கொண்ட தாமிரபரணி படகில் 75 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும்.

    அதேபோல 150 இருக்கைகள் கொண்ட திருவள்ளுவர் படகில் 19 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும். மீதி உள்ள 131 இருக்கைகள் சாதாரண வசதி கொண்டதாகும். இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரையில் கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி), கேப்டன் தியாகராஜன் (இயக்கம்) ஆகியோர் கன்னியாகுமரி படகு துறையை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக இந்த உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.450 வீதமும் சாதாரண அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கணேசன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன், மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நடராஜன், மாநில துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன், துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×