என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்
- தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
- படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக சென்று படகில் பயணம் செய்வதற்கான சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதமும், மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.30 வீதமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படகு கட்டணத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திடீரென்று உயர்த்தியது. இந்த படகு கட்டண உயர்வு இன்று (5-ந்தேதி) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ..75-ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் அதே ரூ. 300 ஆக நீடிக்கிறது.
இந்த படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்டணம் உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.






