என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
- ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
சென்னை:
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் காலமானார்.
அரசியல் வாழ்க்கையில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-
* அ.தி.மு.க. உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
* ஆர்.எம்.வீரப்பன் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.
* 1986 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
* 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

* எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
* எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
* ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
* 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்ட போதுதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஓட்டு போட்டால் இந்த தமிழகத்தை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனை கட்சியிலிருந்து நீக்கினார்.
* இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
- ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
- கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.
- அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
- குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்
கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.
குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.
அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.
- தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள்.
- தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 9, 2024
சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின்… pic.twitter.com/1kIvtcoY3K
- கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது.
- மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் கயத்தாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு மனோகரன் என்ற மகனும், சரவணசெல்வி என்ற மகளும் உள்ளனர். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணசெல்விக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாமா, அவரது மகன் மனோகரன் ஆகிய இருவரும் சரவணசெல்வியை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். நேற்று காலையில் சிங்கராஜ் பணிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து சிங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 48 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது சிங்கராஜ் வேலைக்கு சென்றதையும், அவரது குடும்பத்தினர் சென்னை சென்றதையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
நெல்லை:
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.
ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.
தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.
வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
- செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-
சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.
முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.
சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.
வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
- கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக தங்கர் பச்சான் கேட்டார்.
- கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள மரத்தடி நிழலில் ஒதுங்கினார். அந்த மரத்தடியில் கிளி ஜோதிடர் ஒருவர் அமர்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர்பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக கேட்டார்.
கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு ஜோசியர் கூறினார். கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுத்து, தங்கர் பச்சானை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூண்டுக்கு திரும்பியது. வெற்றி நிச்சயம் என கிளி ஜோதிடர் அடித்து கூற, நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை' என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில் ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னம்பாக்கம் கோவில் அருகே ஜோசியம் பார்த்த 2 கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அருவங்காடு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
- சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தேகப்படும்படியாக பயணி ஒருவர் கையில் பையுடன் இருந்தார். அவரது கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
அவர் கொண்டு வந்த ரூ.30 லட்சத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ஞானவேல் (42). ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என தெரியவந்தது.
சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
- இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.
- பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 116. 1 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித் தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தூரம் 3-வது வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர், அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசை வாக்கம் வழியாக செல்கிறது.
இந்த வழித்தடத்தில் பெரம்பூர் ரெயில் தண்டவாளத்திற்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைகிறது. 4 வழி ரெயில் பாதைக்கு அடியில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
கடந்த வாரம் தண்டவாளத்தை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. அதற்காக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 6 நாட்கள் வேகம் குறைக்கப்பட்டு அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்து சென்றன.
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
கல்வராயன் என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயனாவரத்தில் இருந்து பணியை தொடங்கியது. பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூரில் ரெயில் தண்டவாளத்தை சுரங்கம் தோண்டும் எந்திரம் கடக்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மிக குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அனைத்தும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






