என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
சூலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குன்று என்ற இடத்தைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் பணிக்கு செல்வதற்கு வசதியாக சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தார். இவருடன் அவரது ஊரைச் சேர்ந்த 4 லாரி டிரைவர்களும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேரும் தங்கியிருந்தனர்.
நேற்று நள்ளிரவில் இவர்கள் தங்கியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு அலறினார்கள்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தீ வீடு முழுவதும் எரிந்ததால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபற்றி சூலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அழகர்ராஜா, அவருடன் தங்கியிருந்த டிரைவர் முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாண்டீஸ்வரனுக்கு மட்டும் குறைவான காயங்கள் இருந்துள்ளது. அவர் தான் மற்ற 3 பேரையும் மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார்.
இந்த கோர விபத்து தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் தங்கியிருந்தவர்கள் டிரைவர்கள் என்பதால் லாரியின் தேவைக்காக சுமார் 10 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார்களாம். அந்த பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் சமையல் வேலையும் நடந்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனாலேயே 3 பேர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு நடந்த விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் பெயரிலேயே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்து இருந்தால் அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கும். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் வெடிப்பதற்குள் அதனை குளிர்வித்து வெளியே கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் பலியான அழகர்ராஜா, ராவத்தூர் பிரிவு அருகே நேற்று காலை லாரி ஓட்டிச் சென்றார். அப்போது மொபட்டில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை பலியானார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அழகர்ராஜாவை கைது செய்துள்ளனர். இரவில் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பிய நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் நடந்த சாலை விபத்துக்கும், தீ விபத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.
- மனநல சிகிச்சை அளிக்க டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வாயில் எலியை கவ்வியபடி நடனமாடினார். நீண்ட நேரம் அவர் எலியை வாயில் இருந்து எடுக்காமல் பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.
இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து கடை வியாபாரிகள் தெரிவிக்கையில், இந்த வாலிபரின் பெயர் முத்துப்பாண்டி என்றும் கடந்த சில வருடங்களாகவே இவர் நத்தம் பஸ் நிலையத்தில் சுற்றி வருவதாகவும் கூறினர்.
வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு இங்கேயே உள்ளார் என்றும், இவரது குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள்? என தெரியவில்லை எனவும் கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வலர்கள் இவரை திருப்பத்தூரில் உள்ள மன நல மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்து மீண்டும் தப்பி ஓடி வந்து விட்டார். எனவே இவருக்கு மீண்டும் மன நல சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
பிதாமகன் படத்தில் வரும் விக்ரம் போல இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாகவும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 399 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 70.93 அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கனஅடி என மொத்தம் 955 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.
- பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராம் நகர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலை குட்டி ஒன்று புகுந்தது. பிளாட்பாரத்தில் அதிக அளவில் பயணிகள் இல்லை. இதனால் முதலை குட்டி பிளாட்பாரத்தில் ஏறி ஊர்ந்து சென்றது.
இதனைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர்.
இந்த குட்டிக்கு 6 மாதம் வயது என தெரிவித்தனர். முதலை குட்டியை பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதனை கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அடுத்தடுத்து முதலைகள் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
- தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மார்க்கெட்டுகளுக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தேவையை விட குறைந்த அளவே பொது மக்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். மேலும் இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை என்றனர். தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு கிரேட் தக்காளி ரூ.2ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி தரம் வாரியாக பிரித்து ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
சேலம் மார்க்கெட்களில மற்ற காய்கறிகளின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு-
உருளை கிழங்கு ஒரு கிலோ 55, சின்ன வெங்காயம் 50, பெரிய வெங்காயம் 50, பச்சை மிளகாய் 65, கத்திரி 80, வெண்டைக்காய் 35, முருங்கைக்காய் 110, பீர்க்கங்காய் 45, சுரக்காய் 30, புடலங்காய் 40, பாகற்காய் 75, தேங்காய் 35, முள்ளங்கி 35, பீன்ஸ் 80, அவரை 90, கேரட் 100, மாங்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும்.
- பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும்.
மலை கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அந்த சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மாயாற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்தானதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கறைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கும் மாணவர்கள் மற்றும் வியாபாரத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் நீண்ட வருடமாக தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது.
- மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.
நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லா பகுதியில் மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்தன. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை நீடித்தது. இந்த மழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.
தரைப்பாலம் நீரில் மூழ்கியதை அடுத்து, ஊட்டியில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், பழங்குடியின மக்கள், சுற்றுலா பயணிகள் மாயாற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. கற்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மலைப்பாதையில் கிடந்த மண், கற்கள் அகற்றப்பட்டன. அதனை தொடர்ந்து போக்குவரத்தும் சீரானது.
கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேன்ட் பகுதியில் மூங்கில்கள் சரிந்து அருகே இருந்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூடலூர்-ஊட்டி சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் ராட்ச பாறை மற்றும் மரம் ஒன்று முறிந்து, சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர்.
அவலாஞ்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்கிறது.
இதன் காரணமாக அவலாஞ்சியில் வனத்துறை சார்பில் நடைபெறும் சூழல் சுற்றுலாவுக்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37, அப்பர் பவானியில் 24 செ.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-372, அப்பர் பவானி-248, எமரால்டு-135, கூடலூர்-108, அப்பர் கூடலூர்-106, சேரங்கோடு-113, பந்தலூர்-92, ஓவேலி-88, பாடந்தொரை-85, தேவாலா, குந்தா-83, செருமுள்ளி-82, நடுவட்டம்-79, கிளைன்மார்கன்-59, ஊட்டி-53.
- மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூரில் டாஸ்மாக் உள்ளது.
இந்த கடையில் வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார். இதனை திறக்க முயன்ற போது மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.
என்னால் ஓன்றும் செய்யமுடியாது என்று கூறி மாற்றி பாட்டிலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
- லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 21-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 13 செமீ, வால்பாறையில் 9 செமீ, சோலையாரில் 8 செமீ, தேவாலாவில் 7 செமீ, அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட், பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் பணியிட மாற்றம்.
- காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் பணியிட மாற்றம்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன், தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தருமபுரியில் தாசில்தார் ஜெய செல்வன் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முக சுந்தரம் தருமபுரி தாசில்தாராகவும், தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், நல்லம்பள்ளி தாசில்தாராகவும், தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பென்னாகரம் தாசில்தாராகவும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ரஜினி பாலக்கோடு தாசில்தாராகவும், காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தராஜ் காரிமங்கலம் தாசில்தாராகவும், தருமபுரி ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக வள்ளி பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராகவும், நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தராகவும், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் , காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம்,
பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் தருமபுரி ஆதிதிராவிட நல தனித் தாசில்தாராகவும், பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மில்லர் , தருமபுரி தனி தாசில்தாராகவும் அங்கு பணியாற்றி வந்த பிரசன்ன மூர்த்தி, தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம்செய்து இவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலம் மைசூர், குடகு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்து உள்ள கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இந்த அணைக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 697 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 22 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 82.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடந்த 13-ந்தேதி மாலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடியில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்து அணையில் இருந்து தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது.
இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ் அணை நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 933 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளதால் அந்த அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 579 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. இதனால் நேற்று மாலை 4,500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று முதல் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,013 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,047 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 5054 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் 23ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் வாரத்தொடக்க நாளான நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,830-க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கும் கிலோவுக்கு ரூ.200 குறைந்து பார் வெள்ளி ரூ.99,500-க்கும் விற்பனையாகிறது.






