என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.
    • தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மா நில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டிலும், அதன்பின் 2014-ம் ஆண்டிலும் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பது தான் கண்காணிப்புக் குழுவின் பணியாகும். ஆனால், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.

    எனவே, தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
    • 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    உசிலம்பட்டி:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாமல், ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியை தர மறுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மழலையர் முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட தேவைகள் இந்த நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சகவீதம் மாநில அரசு பங்கும் உள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.3,586 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை நான்கு தவணையாக வழங்கப்படும். முதல் தவணையான ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கப்பட வேண்டும், ஆனால் செப்டம்பர் மாதம் பிறந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

    புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை இணைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இணைந்த பின்பு தான் நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் மத்திய கல்வி துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழக கல்வித்துறை அமைச்சரோ புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லை என்று கூறுகிறார்.

    இன்றைக்கு கல்விக் கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் கொண்டு, நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த கடமையும் ஆற்றவில்லை. கல்வி நிதியில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு புதிய திட்டத்திற்கு மட்டும் ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2,214 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது அது ரூ.1,978 கோடியாக சுருங்கிவிட்டது.

    மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.25 கோடியாக ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், கடலூர் கடற்கரை சாலைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, கோவை போன்ற மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, ஆனால் கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி இல்லை, ரெயில்வே துறைக்கு நிதியில்லை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, வளர்ச்சிக்கு நிதி இல்லை, வறட்சிக்கு நிதி இல்லை என தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யலாமா? மத்திய அரசு நிதி தரவில்லை, அதைப் பெற்றுத்தர மாநில அரசுக்கு வக்கில்லை. இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சராக ஆவது தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாநில நிர்வாகிகள் துரை தனராஜன், வெற்றி வேல், டாக்டர் விஜயபாண் டியன், நகர செயலாளர் பூமா ராஜா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம் பட்டி ரகு, காசிமாயன், மகேந்திரபாண்டி, சிவசக்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.செல்வகுமார், சிந்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நித்யஸ்ரீ சிவனின் திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் அதே விமானம் மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் இன்று லண்டன் செல்வதற்காக 284 பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ஆனால் லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ரத்து செய்யப்ப டுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். லண்டன் செல்லும் விமானம் நாளை (புதன்கிழமை) அதிகாலை, சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு, அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை 7.05 மணிக்கு வரவேண்டிய பயணிகள் விமானம், மதியம் 1 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் லண்டன், அந்தமான், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது.
    • கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இக் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது. இதையடுத்து இரவு 11.30 மணிக்கு உற்சவர் அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணமாக இருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படி யாக குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.

    இந்த நீர்வரத்து குறைந்ததால், சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
    • குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

    மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.

    • 21 கேள்விகளை கேட்டு புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம்.
    • போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வரும் விஜய் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 22-ந் தேதி கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி மற்றும் பாடலை அவர் அறிமுகம் செய்தார்.

    இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று மனு அளித்தார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி அளிக்கப்பட்ட இந்த மனுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சுமார் 1½ லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலை, டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி வி.சாலை பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மாநாடு நடைபெறும் இடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்து உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருத் போலீசார் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்று கூறியிருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக 21 கேள்விகளை கேட்டு விஜய் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் மாநாடு நடை பெறும் இடத்தில் எத்தனை பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்படு கின்றன? மாநாட்டில் பங்கேற்க உள்ள முக்கிய பிரமுகர்கள் யார்-யார்? என்கிற தகவல்களை தெரி விக்குமாறு கேட்டுள்ளனர்.

    மாநாட்டுக்கு வருகை தர உள்ள பெண்கள், குழந்தை கள் எத்தனை பேர்? மாநாட்டுக்கு வருபவர்க ளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள னவா? சாப்பாடு பொட்ட லங்களாக வழங்கப்படு கிறதா? இல்லை அங்கேயே சமைத்து வழங்கப்படுகி றதா? என்பது போன்ற கேள்விகளும் போலீசார் அனுப்பிய நோட்டீசில் இடம் பெற்றிருந்தன.

    இதைத் தொடர்ந்து போலீசார் கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு முறைப்படி பதில் தயாராகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்தாலோ சித்து பதிலை தயாரித்துள்ள னர். இதனை விஜய்யிடம் காண்பித்து நேற்று ஆலோ சனை நடத்தி உள்ளனர். அப்போது சட்ட நிபுணர் களுடனும் விஜய் ஆலோ சனை மேற்கொண்டார்.

    கட்சியினர் தயாரித்து கொடுத்த 21 கேள்விகளுக் கான பதிலையும் விஜய் பொறுமையாக படித்து பார்த்து அனுமதி வழங்கி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து இந்த பதில் மனு வருகிற வெள்ளிக்கிழக்குள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.

    கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பதில் மனுவை அளிக்கிறார்.

    விஜய் கட்சியின் இந்த பதில் மனுவை வாங்கிக் கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் அதனை முழுமையாக படித்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் அளிக்கிறார்கள்? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

    இதன் பிறகு பதில் மனுவில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுப்போம் என்றார்.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறும்போது, மாநாட்டுக்கான பணிகள், போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது. எங்களது பதில் கடிதத்தை ஏற்றுக் கொண்டு போலீசார் அனுமதி வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
    • வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.

    ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
    • கார் பந்தயம், பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசு.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    முந்தையை திமுக ஆட்சிக் காலத்தில் 2009-ம் ஆண்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்ததோடு, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

    தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் இது தொடர்பாக அரசு மருத்துவர்களால் 2020-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு மருத்துவர்களின் கோரிக்கையினை 6 வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பினை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, அரசு மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், புதிதாக அரசாணை எண் 293-ஐ வெளியிட்டு, அதன்படி மருத்துவர்களுக்கு கூடுதல் படிகள் வழங்கப்படும் என்றும், அரசாணை என் 354-ஐ நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கினை தாக்கல் செய்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இந்த மனுவிற்கு 28-10-2024-க்குள் பதில் மனு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெய்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தி.மு.க. அரசோ, வாக்குறுதியையும் நிறைவேற்றமாட்டோம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினையும் மதிக்கமாட்டோம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையையும் செயல்படுத்தமாட்டோம் என்ற மன ரீதியில் இறுமாப்புடன் செயல்பட்டு வருவதும், கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பகும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது.

    கார் பந்தயம், 133 அடி பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசுக்கு 19,000 அரசு மருத்துவர்களுக்கான ஊதிய மற்றும் பதவி உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன தயக்கம் என்று அரசு மருத்துவர்கள் கேட்கிறார்கள்.

    எனவே அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதளை செயல்படுத்த தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,094 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.53 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி என மொத்தம் 3,150 கனஅடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

    41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.44 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.07 அடியாக உயர்ந்து உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    மேகதிசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது.

    திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று காலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைகிறது.

    கடந்த வாரம் மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

    அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடைகிறது.

    இதன் காரணமாக தமிழகத்திற்கு அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும் மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோர பகுதிகள் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    ×