என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
    • தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனுக்கு நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
    • சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின் போது விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.

    "பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்" என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    பள்ளி மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்.
    • நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்களால் ஆபத்து.

    ஆட்டுக்கால் பாயா... அசைவ பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் இந்த உணவு ஓட்டல்களில் அதிகம் விற்பனையாகும் உணவு வகைகளிலும் முதலிடத்திலேயே உள்ளது.

    இடியாப்பத்தை பாயாவில் பிசைந்து சாப்பிடுவது தனி ருசியை தரும். பரோட்டா மற்றும் சாதத்துடனும் பலர் ஆட்டுக்கால் பாயாவை சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு.

    சென்னையில் சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடத்தி வரப்பட்ட 1,700 கிலோ கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது "ஆட்டுக்கால் பாயா" பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கெட்டுப்போன ஆட்டுக்கால்களை ஆய்வு செய்து பார்த்த போது அதில் நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மாதக் கணக்கில் எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி குடோனில் மூட்டையாக போடப்பட்டிருந்த ஆட்டுக்கால்கள் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒரு வேளை இந்த கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் ஓட்டல்களில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டிருந்தால் அதனை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

    கெட்டுப் போன இறைச்சிகளை சமைக்கும் போது உணவும் கெட்டுப் போய்விடும். சில நேரங்களில் நாம் ஓட்டல்களில் சாப்பிட்டதும் வயிறு உப்பிக் கொண்டு வலி ஏற்படும். பின்னர் வாந்தி வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

    அந்த வகையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை வைத்து சமைக்கப்படும் ஆட்டுக்கால் பாயா விஷமாகும் ஆபத்தும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற பாயாக்களை சாப்பிட்டால் அதிக அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்சத்து குறைந்து உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டல் உணவுகளில் எப்போதுமே கவனம் தேவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
    • நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், 2024 - 2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற மானியக் கோரிக்கையின்போது, "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்" எனவும், "கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர் கள் தங்கும் விடுதி – 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும்.

    கிரி வலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலை நயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும்.

    பக்தர்கள் தங்கும் விடுதியானது நீருற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். 'ஏ' பிளஸ் மற்றும் 'ஏ' வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள்.
    • அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வார்டு பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கணபதி ராஜ்குமார் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    25 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி என் பேச்சை கேட்டு ரசித்தார். பின்னர் தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறாய் என்று கேட்டார். நான் உறுப்பினராக கூட இல்லை என்று கூறினேன். தொடர்ந்து நோட்டு புத்தகத்தில் எனது பெயரை எழுதி உறுப்பினராக சேர்த்தவர் கருணாநிதி. எனவே கோவை மாவட்டத்தை என்னால் மறக்க முடியாது.

    வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அந்தளவுக்கு மக்கள் சார்ந்த மகத்தான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

    40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள். ஆனால் 50 ஆண்டுகாலமாக தலைவர் கட்டிக்காத்து வந்த தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி முதலமைச்சர் அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.

    உலகத்தில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியதுடன் நாணயம் வெளியிட மத்திய மந்திரியை வரவழைத்து அனைவரும் பெருமைப்படும் வகையில் முதலமைச்சர் செய்து காட்டினார். மத்திய அரசுடன் கொள்கையில் வேறுபட்டு இருந்தாலும் மு.க.ஸ்டாலின் அழைத்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேரடியாக வந்து நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டார்.

    ஆனால் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட மத்திய அரசின் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. சட்டசபையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்தை திறப்பதற்கு மத்திய அமைச்சரை எடப்பாடி பழனிசாமி அழைத்தபோது அவர்கள் வரவில்லை. ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.

    எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒட்ட வைக்க முடியாது. ஆனால் தி.மு.க. அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் பற்றிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசியதை பெரிதாகி பிரச்சனை ஆக்கினார்கள். நகைச்சுவையை, பகைச்சுவையாக்கி பார்த்தார்கள். அமைச்சர் துரைமுருகனும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்த பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. ஆனால் அ.தி.மு.க-பா.ஜ.க.வின் மோதல் என்பது ஒட்ட முடியாத சண்டை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 'தி கோட்' திரைப்படம் நாளை மறு நாள் (5-ந்தேதி) வெளியாகிறது.
    • விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்கங்களை எழுப்பி வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை மறுநாள் (5-ந்தேதி) வெளியாகிறது.

    விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகம் முழுவதும் இந்த படத்தை வரவேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

    ஆனால் தியேட்டர்களில் விஜய் பட பேனர்களை வைப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எப்போதுமே புதிய படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பேனர் மற்றும் கட்-அவுட்களை படம் வெளியாகும் நாளில் வைத்து அழகு பார்ப்பார்கள்.

    பின்னர் அந்த பேனர்கள் அகற்றப்பட்டு விடும். இதுபோன்றே விஜய் ரசிகர்களும் பேனர் வைப்பதற்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் தியேட்டர்களில் பேனர் மற்றும் கட்-அவுட்களை வைப்பதற்கு விஜய் ரசிகர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட வில்லை.

    தங்களது பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரசிகர்கள் சார்பில் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீசார் உள்ளாட்சி நிர்வாகித்தினரும் அனுமதி மறுத்து வருவது தெரியவந்துள்ளது.

    இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் பேனர் வைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். விஜய் ரசிகர் ஒருவர், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட பார்வையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    அதில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் போது குறுகிய காலமே வைக்கப்படும். பேனர்களுக்கு உரிய அனுமதியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுவதற்கும் அனுமதி கிடைப்பது இல்லை என்று விஜய் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஏற்கனவே உள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க கொடியை அகற்றி விட்டு புதிய கொடியை ஏற்றுவதற்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் விஜய் படம் வெளியாகும் தியேட்டர்களில் திட்டமிட்டபடி பேனர்களை வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தியேட்டர்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது.
    • வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    * வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது.

    * வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வே எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    * வகுப்புக்கு வராதோரை தேர்வெழுத வைத்தால் பி.எட். கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    * வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சென்னையில் பட்டா பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது.
    • மூன்று மாதத்திற்கும் பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை ஏற்று உடனடியாக அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 2 ஆயிரத்து 100 குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைய செய்த மக்களுக்கும் கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலைஞர் ஆட்சி காலத்தில் 1970-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார்.

    இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.920 கோடி செலவில் 60 குடியிருப்புகளை ஆன்லைன் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வடசென்னை பகுதியில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    பட்டா வேண்டும் என்ற பல வருட கனவு இன்றைக்கு நிறைவேறியுள்ளது. சென்னையில் பட்டா பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. மூன்று மாதத்திற்கும் பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளார்.

    எத்தனை சிக்கல் வந்தாலும் பரவாயில்லை. மக்களுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    முதலமைச்சர் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படுகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெறுகிறார்கள்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 46 லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். தரமான கல்வி, சுகாதாரம் என்று இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளோம்.

    அரசின் பிராண்ட் அம்பாசிடர் மக்களாகிய நீங்கள்தான். இந்த அரசை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலக் குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம், பகுதி செயலாளர் அருள்தாசன், பூச்சி முருகன், புழல் ஒன்றிய செயலாளர் வக்கீல் சரவணன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த், சிறப்பு அதிகாரி மதுசூதன் ரெட்டி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
    • தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.

    புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.

    இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

    ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.

    தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.

    இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.

    கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.

    இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.

    எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை உள்ளிட்ட 4 வட்டங்களில் 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்.
    • போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காளிகுமார் நேற்று அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர்.

    அப்போது கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

    அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×