என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
    • கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன.

    சத்குருவின் பிறந்த தினமான இன்று 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை" (BSSFPC) தொடங்கி உள்ளனர். இது இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.

    மண் வளத்தை மேம்படுத்த சத்குரு கடந்த 2022-ஆம் ஆண்டு "மண் காப்போம்" எனும் உலகளாவிய இயக்கத்தை தொடங்கினார்.

    இவ்வியக்கத்தினால் உந்தப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டதே "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்".


    இந்நிறுவனத்தை குஜராத் மாநில சட்டமன்றமான 'விதான் சபாவின்' சபாநாயகரும், பனஸ் டெய்ரியின் தலைவருமான ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி இன்று தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் தராத் பகுதியில் 'பனஸ் மண் பரிசோதனை ஆய்வகம், கிமானாவில் 'பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம்' மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்வுக்கு காணொளி மூலம் சத்குரு வாழ்த்து செய்தியில், "குஜராத் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக, மண் காப்போம் பனஸ் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை உருவாக்கி உள்ள பனஸ் டெய்ரியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

    இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மக்களுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நம் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் மண்ணுக்கும் ஊட்டமளித்து அதை வளம் கொழிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் செய்யும்.

    நிச்சயமாக FPO-க்கள் பாரதம் மற்றும் கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன. ஏனெனில் அவை நமது 65% மக்கள்தொகையின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. சங்கர்பாய் மற்றும் பனஸில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்துகளும், ஆசிகளும்" எனக் கூறியுள்ளார்.

    https://x.com/SadhguruJV/status/1830887859282420019


    மண் காப்போம் இயக்கம் மற்றும் பனஸ் டெய்ரி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி பேசுகையில் 'இது பனஸ் டெய்ரியின் வழக்கமான தினம் அல்ல. இது ஒரு முக்கியமான நாள்.

    தராத் மற்றும் கிமானாவில் அமைந்துள்ள பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நாம் ஏற்படுத்தியுள்ள புதிய வசதிகள் நமது நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.

    நம்மை தாங்கி நிற்கும் மண்ணை காப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட தேவையான அறிவு, கருவிகள் மற்றும் ஆதரவை நாம் வழங்குகிறோம்." எனக் கூறினார்.

    இந்நிகழ்வில் மண் காப்போம் இயக்கத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரவீணா ஶ்ரீதர் பேசுகையில் "பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உலகளாவிய தரநிலை முன்னுதாரணமாக அமையும்" எனக் கூறினார்.

    இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளை இணைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறது.

    பனஸ் டெய்ரி குழுவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தொடர்ச்சியான கருத்தரங்கங்களை நடத்தி உள்ளது.

    அதிகம் வறண்ட பகுதியாக அறியப்படும் இந்த தராத் மற்றும் லக்கானி பகுதியில் உள்ள விவசாயிகள் மோசமான மண் வளம், குறைவான நிலத்தடி நீர் மற்றும் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.

    இந்த பகுதியில் அளவுக்கு அதிகமான ரசாயன பயன்பாட்டால் மண் வளம் குறைந்துள்ளது. மண்ணின் ஆரோக்கியம் குறித்த துல்லியமான கணக்கீடு இல்லாததால் விவசாயிகள் தேவையில்லாத ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும் தவறி உள்ளனர்.

    இந்த இடைவெளியை சரி செய்ய 'அதி நவீன மண் பரிசோதனை ஆய்வகம்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை ஆய்வகங்கள் சிலவற்றுள் ஒன்றாக மண் குறித்த முழுமையான அறிக்கையை இந்த ஆய்வகம் வழங்கும்.

    இந்த அறிக்கையின் மூலம் விவசாயிகள் தங்கள் மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த சரியான தகவல்களை அறிந்து, தேவையான உரங்களை தேர்வு செய்ய முடியும்.

    இதே போல் பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், நிலைத்த நீடித்த உரங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்யும். இந்த ஆய்வகத்தை பார்வையிட்ட விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரங்கள் இங்கே உருவாக்கப்படுவதை நேரடியாக கண்டனர்.

    உயிர் உரங்கள் நிலத்தின் விவசாய உற்பத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

    கிமானாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் மண் தன்மைக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் செயல்படும்.

    முதல் கட்டமாக இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 3000 விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கான பதிவுகள் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், வரவிருக்கும் பருவ காலத்தில் முதன் முறையாக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதை குறுகிய கால இலக்காக இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

    இந்த நிறுவனத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கும் 911 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்தப் பயிற்சி பல மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் முதல் வருடத்திற்கான மண் பரிசோதனையை இலவசமாக பெறுவார்கள். மேலும் தொடர்ச்சியான பரிசோதனைகள் அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    மேலும் விவசாயிகள் ட்ரோன் சேவைகள், பயிர் சார் மண் மேலாண்மை பயிற்சிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள்.

    பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நீண்ட கால இலக்கு, பனஸ்கந்தா மாவட்டம் முழுவதும் விரிவடைந்து அனைத்து விவசாயிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே ஆகும்.

    இதன் மூலம் விளைநிலங்களின் மண் வளத்தை கூட்டுவது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பகுதியின் உணவு மற்றும் நீர் தேவைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்தடைந்தார்.
    • ஈட்டன் நிறுவனம்-தமிழக அரசு இடையே ரூ.200 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் வாயிலாக 20 லட்சம் இளைஞர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்தடைந்தார்.

    இந்நிலையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க, சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

    இதைத்தொடர்ந்து ஈட்டன் நிறுவனம்-தமிழக அரசு இடையே ரூ.200 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை ஈட்டன் நிறுவன ஆலை விரிவாக்கம், பொறியியல் மையம் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசு - ஈட்டன் நிறுவனம் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் சென்னையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.

    • விஜய் வசந்த், அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

    அந்த வகையில் அவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

    மேலும் ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!

    தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மாரியப்பன் தங்கவேலு ரியோ (பிரேசில்), டோக்கியோ (ஜப்பான்) பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே பதக்கம் வென்றுள்ளார். தற்போது 3-வது பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் ரத்து.
    • பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை - எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


    சென்னை கடற்கரை - தாம்பரம்

    * சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், அதே நாளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களூம் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து அதே தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து அதே தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று (4-ந்தேதி) மற்றும் 6, 8 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், அதே தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்பட்டு செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    * செங்கல்பட்டிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 8.45, 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், அதே நாட்களில் திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    * சென்னை கடற்கரையிலிருந்து வரும் இன்று (4-ந்தேதி), 6, 8 ஆகிய தேதிகளில் காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
    • விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நடைமுறைப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது.

    அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.


    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது.

    உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளத்தை மேம்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடலாம்.

    இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இன்று (நேற்று) முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தடங்கலின்றி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் கவனத்திற்கு...

    தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே பத்திரப்பதிவு செய்யும் போதே, அதன் உரிமையாளர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதனை மக்கள் முதலில் சரிபார்க்க வேண்டும்.

    அப்படி அவர்களது பெயரில் பட்டா இல்லாவிட்டால், முதலில் அவர்களை பட்டா மாற்றி வாருங்கள் என்று கூறவேண்டும்.

    அதன்மூலம் அவர்களது பெயரில் பட்டா வந்து விட்டால், நாம் கிரையம் செய்யும்போது நமது பெயருக்கு பட்டா எளிதாக மாறி விடும். ஒருவேளை அதனை நாம் கவனிக்காவிட்டால், அதன் பிறகு பட்டா மாற்றும் பணியினை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
    • சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் வாயிலாக 20 லட்சம் இளைஞர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நேற்று சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    "புதிய கனவுகளுக்கான களம் அமைக்கும் மாலையின் பேரமைதி" என பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.

    • போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
    • எக்ஸ் சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.

    இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவை நடந்து வருகிறது.
    • உணவு பொருட்களான காய்கறி, முட்டை, மளிகை பொருட்களையும் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் சேவை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவையும் நடந்து வருகிறது.

    இதுதவிர கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம்- இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

    இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான நேரடி கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையானது இந்திய பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளும் மேற்கொண்ட இணைப்பு முயற்சிகளுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் என்கின்றனர்.

    இதுகுறித்து கப்பல் போக்குவரத்தை தொடங்க இருக்கும் எச்வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (HV Cargo Logistics) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கூறும்போது, 'இந்தியா- மாலத்தீவு இடையே வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக்டோபர் 1-ந்தேதி முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

    இதன்மூலம் வாராந்திர அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இதில் அடங்கும். இந்த புதிய சேவை செலவு குறைந்த போக்குவரத்தாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ந்தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க 2½ நாட்கள் வரை ஆகும்.

    குறிப்பாக மாலத்தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த சேவை உதவிகரமாக இருக்கும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொக்லைன் எந்திரங்கள், கிரேன்கள், தொட்டிகள், லாரிகள், திடப் பொருட்கள், எந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பெரிய மற்றும் கனரக பொருட்கள், இவற்றுடன் உணவு பொருட்களான காய்கறி, முட்டை, மளிகை பொருட்களையும் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும்.

    இந்த முயற்சியானது தளவாட மற்றும் பிற செலவுகளை குறைக்கும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் இந்தியா-மாலத்தீவுகளுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான நேரத்தை குறைக்கும்.

    நேரடி கப்பல் சேவை மூலம் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கடல்சார் வர்த்தக தொடர்புகள் மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் அருகில் உள்ள 1,500 தீவுகளுக்கும் நேரடியாக சென்று சரக்குகளை கையாளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.

    தூத்துக்குடி மற்றும் மாலத்தீவு இடையே ஒரு சேவை முன்பு இந்திய கப்பல் கழகத்தால் இயக்கப்பட்டது. இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வணிகங்கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை எளிதாக்குகிறது' என்றார்.

    • டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.
    • நிஜாமுதினில் இருந்து மதுரை வரும் ரெயில் நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    சென்னை:

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டு, அவை அந்தரத்தில் தொங்குகின்றன.

    இதனால் தமிழ்நாட்டில் இருந்து அந்த பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு ரெயில்கள் ரத்து மற்றும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல், கன்னியாகுமரி, நெல்லை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகள் வழியாக தமிழகம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று (4-ந்தேதி) மற்றும் 7-ந்தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சி செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (22824), டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12622) ஆகிய ரெயில்கள் இன்று (4-ந்தேதி) ரத்து செய்யப்படுகின்றன.

    கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் (12666), நெல்லையில் இருந்து மேற்குவங்காள மாநிலம் புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் (22606) ஆகியவை வருகிற 7-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ், சென்டிரலில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், ராஜஸ்தான் மாநிலம் சாலிமாாில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து கோவை வரும் ரெயில் என 4 ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலும், நிஜாமுதினில் இருந்து மதுரை வரும் ரெயிலும் நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து ஜெய்பூா் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்தார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசத்தின் பெண் சக்தியை ஊக்குவிக்கிறது.
    • பாரதம் விளையாட்டு வல்லரசாக வளருவதற்கு இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

    பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், விராங்கனைகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "பாரா ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவுக்காக பதக்கங்களை நமது பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வென்றது உண்மையிலேயே மறக்க முடியாத மற்றும் மகிழ்ச்சியான தருணங்களாகும். மனிஷா ராமதாஸ், துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோருக்கு பாராட்டுகள்.

    உங்களின் மன உறுதியும் திறமையும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துவது மட்டுமின்றி, தேசத்தின் பெண் சக்தியை ஊக்குவிக்கிறது. பாரதம் விளையாட்டு வல்லரசாக வளருவதற்கு இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது."

    இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

    • ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.
    • போலீஸ்காரர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

    அருப்புக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிக்குமார் (வயது 33), ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

    ஆனாலும் அதனை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.

    ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை கூட்டத்தில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதேபோல் போலீஸ்காரர் ஒருவரும் இதில் தாக்கப்பட்டார்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாராணை நடத்தி வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டதாக மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×