என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.

    இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி நல திட்டங்களோடு கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர். 

    அம்பத்தூரில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடியை வழங்கினர்.

    முன்னதாக விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கி மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை கொடுத்தனர். 

    இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    • நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
    • காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும்.

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

    இந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த 4 மடங்களையும் நியமிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தனது பெண் சீடர் உமாதேவிக்கு பொது அதிகாரம் வழங்கிய நித்யானந்தா இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்று மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்தார்.

    நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று மனுதாரர் பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரிய வேண்டும். அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மடங்களை நியமிக்க தக்காரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    மேலும், "நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும் காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    • பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
    • 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

    • அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும்.
    • தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    TNPSC குரூப் 2 தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II-இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது.

    தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscgov.in மற்றும் www.tnpscexamsin-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    1. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024 நாள் 20.06.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II.இல் (தொகுதி 11 மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது.

    நேர அட்டவணை

    வரவேண்டிய நேரம் - காலை 08.30 மணி

    சலுகை நேரம் தேர்வு - காலை 09.00 மணி வரை

    தேர்வு தொடங்கும் நேரம் - காலை 09.30 மணி

    2. அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். சலுகை நேரத்திற்குப் பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    3. தேர்வர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் தேர்வர் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD)/ வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.

    4. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு. முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் நிரந்தரக்கணக்கு அட்டை(PAN CARD) வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

    5. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (grievancetnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்.

    6. தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    7. மின்னணு சாதனங்களான அலைபேசி (Mobile Phone) மற்றும் புத்தகங்கள், குறிப்பேடுகள், கைப்பைகள், மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்றவற்றுடன் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினால், அவர்தம் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் / அவரது விடைத்தாள் செல்லாததாக்கப்படலாம் அல்லது தேர்வாணையத்தால் விதிக்கப்படும் வேறு ஏதேனும் அபாரதத்திற்கும் உள்ளாக நேரிடும்.

    எனவே, தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்ட இத்தேர்வு தொடர்பான அறிவிக்கை. தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, OMR விடைத்தாள் மற்றும் வினாத் தொகுப்பு ஆகியவற்றில் உள்ள அறிவுரைகளை படித்து, தேர்வினை கவனமுடன் எழுதிட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
    • இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாக வேல்முருகன் கூறினார்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் 3 அடி முதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

    அவ்வாறு தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்து அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

    இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும்போது நீர் மாசுபடுகிறது என்று கூறி சமீப காலமாகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கக்கூடாது மற்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதனை ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என்று இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியிலும், மரங்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.

    இவர் ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.

    இதன் மூலம் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சிலைகளில் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை உள்ளே வைத்து தயாரிப்பதால் இந்த வகை சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த சிலைகள் ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை விலை போவதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாகவும் வேல்முருகன் கூறினார்.

    பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.

    • மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
    • இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன்.

    மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று பட்டாசு ஆலையில் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டது.

    இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு தீக்காயத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்த சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55), சின்னனூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (30), முத்துராஜ் (29), சுரேஷ் ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடித்த ஆலை முழுவதும் தண்ணீரை ஊற்றி பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

    போலீசாரின் விசாரணையில் ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்க முற்படும்போது ஏற்பட்ட உரசலில் மருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பருவமழையின்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
    • ஒரே நேரத்தில் பெய்யும் கன மழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குவது வழக்கம். போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கக்கூடிய இந்த பருவமழையின்போது வெள்ள பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு.

    எனவே பருவமழைக்கு முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசு துறைகள் இணைந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்.

    அதே போல் இந்த ஆண்டும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷ னர் குமரகுருபரன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, பரந்தாமன், கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார்த்திகேயன், சித்திக், மண்டல அலுவலர்கள், குடிநீர் வாரியம், மெட்ரோ ரெயில், நீர்வளத்துறை, மின்வாரியம், பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினார்கள்.

    பருவமழையின்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அதுபோன்ற நிலை இந்த முறை வரக்கூடாது என்று எடுத்துரைத்த னர்.

    சென்னையில் பல பகுதிகளில் நடக்கும் மழை நீர் கால்வாய் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்க கேட்டுக் கொண்டனர். மேலும் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

    இந்த பணிகள் தற்போது தொடங்கி இருந்தாலும் அதை விரைவுபடுத்தி பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்.

    மழை நீர் எளிதாக செல்லும் வகையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

    கால்வாயில் பெருக்கெடுத்து வரும் உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் விவாதிக்கப்பட்டது.

    ஒரே நேரத்தில் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

    கடந்த ஆண்டில் பருவமழையின்போது தண்ணீர் தேங்கிய பகுதிகளை இந்த முறை தண்ணீர் தேங்காதவாறு பாார்த்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் கூறினார்கள்.

    ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை ஆய்வு கூட்டத்தின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்க வலியுறுத்தினார்கள். அப்போது அதிகாரிகள் சரியான பதில் கூறாததால் இந்த கூட்டம் நடந்தது. எனவே இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவர் சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மா.கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.

    இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

    • 71 கல்லூரிகளில் 2 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
    • போலீஸ் புரோ திட்டமும் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் அடங்குவதற்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.

    இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

    கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

    கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.

    இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டத்தில் போலீஸ்காரர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு போலீஸ் அக்கா பணியில் இருப்பார்.

    அவருக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். அத்துடன் கல்லூரியில் பணியில் இருக்கும் அந்த போலீஸ் அக்காவின் செல்போன் எண் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும் போது, அந்த கல்லூரியில் உள்ள போலீஸ் அக்காவை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். மேலும் போலீஸ் அக்காவின் செல்போன் எண்ணும் மாணவிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

    அந்த எண்ணை தொடர்பு மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

    கோவை மாநகரில் உள்ள 71 கல்லூரிகளில் இந்த திட்டம் 2 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உள்ளடக்க புகார் கமிட்டி தான் இந்த திட்டத்தை தொடங்க உந்துதலாக இருந்ததாகவும், அவர்களுடன் இணைந்து போலீஸ் அக்கா பணியாற்றி வருகின்றனர் எனவும் கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அக்காவான பெண் போலீஸ் ஒரு சகோதரியை போல, மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் கனிவுடன் பேசுவார்கள்.

    இதன் மூலம் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்திருந்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கின்றனர்.

    பிரச்சினைகளை கேட்டதும் அந்த பெண் போலீஸ் அதனை சாதுர்யமாக கையாண்டு, மாணவியை அந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வர வைக்கின்றனர். இதன் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

    கோவை மாநகரில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 473 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திற்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூறும் போது, போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளுக்கு பாதுகாப்பான உணர்வையும், அவர்கள் பிரச்சினைககளில் இருந்து வெளிவருவதற்கான தீர்வை ஏற்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    தற்போது இந்த திட்டத்தை தான் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீசாருக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தலை தடுக்கவும் 'சாகர் கவாச் ஆபரேஷன்' என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்' ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    அந்த வகையில், நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பின்னர், கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இன்று காலை தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகையானது நாளை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

    • கடந்த வாரம் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த மாதம் 2 முறை நிரம்பியது. இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளதால் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 888 கனஅடியாக இருந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இதுவரை 13 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 87.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    ×