என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
- பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்!
சென்னை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,
ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.
- வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.48 கோடி செலவில் கட்டிடம்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, அணுமின் நிலையம் சார்பில் அதன் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1கோடியே 48 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, ஆகியோர் பங்கேற்று, வகுப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் அனுமின் நிலைய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.
நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கோயம்பேடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- அரசு பஸ்களில் இன்று பயணம் செய்ய காலை நிலவரப்படி 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
சென்னை:
சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களையொட்டி வெளியூர் பயணம் அதிகரித்துள்ளதால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல பிற பகுதிகளில் இருந்தும் தமிழகம் முழுவதும் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளனர்.
கோயம்பேடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்களில் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வருகிறது. மேலும் சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் இடங்கள் இல்லை.

புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் ரெயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன. ஞாயிற்றுக்கிழமை வரை பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் இன்று பயணம் செய்ய காலை நிலவரப்படி 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
தமிழகத்தின் பல இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் பயணத்தை உறுதி செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து 27 ஆயிரம் பேரும், சென்னையில் இருந்து 15 ஆயிரம் பேரும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் பயணம் அதிகரித்து உள்ளது.
கூட்டத்தை சமாளிக்க தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்து உள்ளோம். முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடர கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
- சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
- தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 3-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஈட்டன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அஷ்யூரன்ட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்!
- நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!
சென்னை:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
- ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- கருவி குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரெயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, சென்டிரல் ரெயில் நிலையத்தில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் (ஏ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இந்த கருவியை முதல்கட்டமாக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வைத்துள்ளோம்.
இதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.
- விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
- விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும்.
விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.
பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு கரைப்பதும் உண்டு. ஆனால் தற்போது சற்று வித்தியாசமான முறையில் பசும் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனைக்கு வந்து உள்ளது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பசும் சாணத்தால் விநாயகர் சிலை செய்து வரும் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் பிரிதா மணிகண்டன் கூறியதாவது:-
நாட்டு மாடுகளை காப்பதற்காக ஆதம்பாக்கம், பள்ளிக்கரணையில் 120 மாடுகளுடன் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறோம். இதில் சிவகங்கை குட்டை, தஞ்சாவூர் குட்டை, காஞ்சி குட்டை, துரிஞ்சல் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகள் எங்களிடம் வாழ்ந்து வருகின்றன.
இவற்றின் மூலம் எதிர்பார்த்த அளவு பால் உற்பத்தி இல்லாததால் விவசாயிகளிடம் நாட்டு மாடுகளுக்கு நல்ல வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.
இதனால் இந்த வகை மாடுகள் அழிந்துவிடும் நிலை இருப்பதால் இதுகுறித்து பலருக்கும் விழிப்புணர்வு அளிப்பதுடன், இவற்றை பாதுகாத்தும் வருகிறோம்.
பசுக்களில் இருந்து பால் மட்டுமே வருமானம் என்று பார்க்காமல், சாணத்தில் இருந்து பொருட்களை தயாரித்து வருமானம் பார்க்க முடியும்.
குறிப்பாக இயற்கை உரம், கம்யூட்டர் சாம்பிராணி, சோப்பு போன்ற பூஜை பொருட்கள், பாத்திரம் பூசும் பொடி, கொசுவிரட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், சோப்பு, முகத்தில் தடவும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், கண், மூக்குகளில் விடப்படும் நெய் உள்ளிட்ட பஞ்ச கவ்ய மருந்துகள் போன்றவை சாணம் மூலம் தயாரித்து வருகிறோம்.
தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் பசு மாட்டு சாணத்தால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எந்தவித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் சுத்த சாணத்தால் பின்விளைவு இல்லாத வகையில் தயாரித்து வருகிறோம்.
சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் களிமண் பிள்ளையார் வைத்து பூஜித்து விட்டு நீரில் கரைப்பதற்கு நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை கொண்டது சாணப்பிள்ளையார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சிறியது (5 செ.மீ) ரூ.90, சற்று பெரியது (12 செ.மீ) ரூ.220, அதைவிட சற்று பெரியது (17 செ.மீ) ரூ.350, பெரியது (27செ.மீ) ரூ.450 என 4 வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் ரசாயன பொருட்கள் கலக்காத சுத்தமான முறையில் இயற்கையிலேயே தயாரிக்கப்பட்ட மங்களகரமான நிறம் சேர்ப்பதற்கு கூடுதலாக ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இந்த வகை விநாயகர் சிலைகள் ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லூரில் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்று விற்பனையாளர்கள் கூறினர்.
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
- தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனை தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்றே பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். இதை திரித்து அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக பரப்பி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
- தொடர் விடுமுறையால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்தம், 7-ந்தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி, 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஆயிரத்து 30 பஸ்களும், மற்றும் 8-ந் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ந்தேதிகளில் 192,3150 பஸ்களும், மாதாவரத்தில் இருந்து 6 மற்றும் 7-ந் தேதிகளில் 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது.
- நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகை, புரட்டிப்போட்டு உள்ளது.
ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பின்னர் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மலையாள நடிகர் சங்கமே ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால் மலையாளத் திரை உலகமே கலகலத்துப்போய் உள்ளது.
இதனிடையே தமிழ்த்திரை உலகிலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்று நடிகைகள் ஊர்வசி உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தமிழ்த்திரை உலகில் அவ்வாறான புகார்கள் இதுவரை வரவில்லை. அவ்வாறு வந்தால் அதுபற்றி விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுபோன்ற பரபரப்புகள் ஒருபுறம் இருக்க, விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கடந்த 22.4.2019 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு (ஜெண்டர் சென்சேஷன் அண்ட் இண்டர்னல் கம்ப்ளயிண்ட் கமிட்டி) உருவாக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் 5 வருடம் சினிமாவில் பணியாற்ற தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
* பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்படுவார்.
* பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
* பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* பாலியல் தொல்லைக்குள்ளானவர்கள், தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ-மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
* பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு போலீசின் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
* மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாழை படம் பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!
'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.
விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.






